×

சித்தூர் அடுத்த பூனேபல்லியில் பாதியில் நிற்கும் குடியிருப்பு பணிகளை விரைவில் தொடங்க வேண்டும்: பாஜவினர் கோரிக்கை

சித்தூர்: சித்தூர் அடுத்த பூனேபல்லியில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை பாஜ நகர தலைவர் ராம் பத்ரா தலைமையில் அக்கட்சியினர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சித்தூர் அடுத்த பூனேபல்லியில் பல கோடி மதிப்பில் 1,500 குடியிருப்புகள் கொண்ட 7 அடுக்குமாடி கட்டிடம் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டது. ஆனால் அதற்குள் 2019ம் ஆண்டுக்கான தேர்தல் வந்தது. இதனால் தற்காலிகமாக குடியிருப்புகள் கட்டும் பணி நிறுத்தப்பட்டது. தேர்தல் நடந்து முடிந்த பிறகும் புதிய அரசு பதவியேற்ற பிறகும் அங்கு பணிகள் நடைபெறவில்லை. தற்போது அந்த கட்டிடத்தை ஆய்வு செய்தததில் 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது.

மீதமுள்ள 25 சதவீத பணிகள் நடைபெற வேண்டும். மாநில அரசு டெண்டர் எடுத்தவர்களுக்கு அதற்கான தொகையை வழங்கவில்லை. இதனால் டெண்டர் எடுத்தவர்கள் நிதி இல்லாததால் பணிகளை தொடங்காமல் நிறுத்திவிட்டனர்.  இதுகுறித்து டெண்டர் எடுத்தவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் மாநில அரசு நிதி வழங்கவில்லை என்று தெரிவித்துவருகின்றனர். மத்திய அரசு அனைத்து நிதியையும் வழங்கியும் மாநில அரசு அந்த நிதியை டெண்டர் எடுத்தவர்களுக்கு வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.  தற்போது ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை நிறுத்தி வைத்த பணிகள் தொடரப்படவில்லை.

எனவே உடனடியாக மாநில அரசு பாதியில் நிறுத்தப்பட்ட பணிகளை உடனடியாக தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஏழை, எளிய மக்கள் பயன்பாட்டிற்கு வீடுகள் வழங்க வேண்டும் என்றார். இதில் நகர துணைத்தலைவர் சீனிவாஸ், பொதுச் செயலாளர் ஹரி பிரசாத், பொருளாளர் தோட்டப்பாளையம் வெங்கடேஷ், செயலாளர் மகேஷ்,  துணை செயலாளர்  மதுசூதன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Baja ,Chittoor ,Poonapally , Chittoor, Residential Service, BJP
× RELATED நடைபெற உள்ள பொதுத்தேர்தலில்...