கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் பஞ்சமூர்த்தி மண்டபம் பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படும் அவலம்: கண்டுகொள்ளுமா அறநிலையத்துறை?

கும்பகோணம்: கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் திருமஞ்சன வீதி காவிரி படித்துறையில் உள்ள திருமஞ்சன பஞ்சமூர்த்தி மண்டபம் போதுமான பராமரிப்பின்றி சிதைந்து காணப்படுகிறது. இதை விரைந்து சீரமைக்க வேண்டுமென அறநிலையத்துறைக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோயில் உலகில் முதலாவதாக தோன்றியதாக வரலாறு கூறுகிறது. இந்த கோயிலில் உள்ள மங்களாம்பிகையம்மன் 76 லட்சம் கோடி மந்திரங்களை உள்ளடக்கியவராக இருப்பதால் விஷேச நாட்கள் மட்டுமின்றி தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயிலில் ஒவ்வொரு தை மாதம் 1ம் தேதி சுவாமி, அம்மன், முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறும்.

பின்னர் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி காவிரி படித்துறையில் உள்ள பஞ்சமூர்த்தி மண்டபத்துக்கு பல்லக்கில் தூக்கி கொண்டு சென்று வைத்து விடுவர். இதையடுத்து அஸ்திர தேவருக்கு காவிரியில் தீர்த்தவாரி நடைபெறும். பின்னர் மாலையில் கோயிலில் இருந்து ரதம் புறப்பாடு நடந்து அதில் பஞ்சமூர்த்திகளையும் அலங்காரம் செய்து ரதத்தில் வீதியுலா நடைபெறும். மேலும் தினம்தோறும் காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் யானை மீது வைத்து எடுத்து வருவது வழக்கமாக இருந்து வந்தது. நாளடைவில் அவ்வழக்கம் மறைந்து போனது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பஞ்சமூர்த்தி மண்டபம் போதுமான பராமரிப்பு இல்லாததால் சிதிலமடைந்து காணப்படுகிறது. மண்டபத்தின் மேல் முகப்பில் பஞ்ச மூர்த்திகள் சுதை சிற்பம் மற்றும் மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் சிதைந்து காணப்படுகிறது. மேலும் மண்டபத்தை சுற்றிலும் செடிகள், மரங்கள் முளைத்துள்ளது. மேலும் அருகில் உள்ளவர்கள் தங்களது கால்நடைகளை கட்டி வைத்து கொள்ளும் இடமாக மாற்றி வருகின்றனர்.

இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையைடுத்து 2016ம் ஆண்டு நடந்த மகாமகத்தின்போது அறநிலையத்துறையினர் கண்துடைப்புக்காக பஞ்சமூர்த்தி மண்டபத்தை சுத்தப்படுத்தினர். அதன்பின்னர் அந்த மண்டபத்தை கண்டுகொள்ளவில்லை. தற்போது இரவு நேரங்களில் மது அருந்து திறந்தவெளி பாராக மண்டபம் மாறி வருகிறது. இந்நிலையில் வரும் (தை 1ம் தேதி) 15ம் தேதி பொங்கல் திருநாளன்று மங்களாம்பிகையம்மன் கும்பேஸ்வரர் சுவாமிகள் தட்சியாயினம் காலம் தொடங்குவதை முன்னிட்டு தீர்த்தவாரிக்கு சென்று அம்மண்டபத்தில் தங்கி தீர்த்தவாரி கண்டு கொண்டு விட்டு மாலையில் கோயிலுக்கு திரும்புவர். எனவே மாவட்ட நிர்வாகம் அவலநிலையில் காட்சியளிக்கும் மண்டபத்தை சீரமைத்து சுத்தமாக பராமரிக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kumbhakonam Kumbeswarar Temple Panchamurthy Mandapam ,Kumbakonam Kumbeswarar Temple ,Panchamurthy Hall ,Charity Department , Kumbakonam Kumbeswarar Temple, Panchamurthy Hall, Charity Department
× RELATED கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில்...