×

சபரிமலை விவகாரத்தில், சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை..5 நீதிபதிகள் எழுப்பிய 7 கேள்விகளை மட்டுமே ஆய்வு செய்ய உள்ளோம் : உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: சபரிமலை விவகாரத்தில், சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. சபரிமலை தொடர்பான வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு சில விளக்கங்களை கொடுத்துள்ளது.  

*சபரிமலை விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் இன்று காலை விசாரிக்கப்பட்டது.

*அப்போது, சபரிமலை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே அறிவித்தார்.

*அதாவது, உச்சநீதிமன்றம் சபரிமலை விவகாரத்தில் ஏற்கெனவே அளித்த தீர்ப்பில் பரிந்துரைக்கப்பட்ட கேள்விகள் குறித்து மட்டுமே விசாரணை என தெரிவித்துள்ளார்.

*பெண்கள் கோவில், மசூதி போன்ற வழிபாட்டு தலங்களுக்குள் நுழைவது வழிபாட்டு முறைகளோடு சம்பந்தப்பட்ட விஷயமா என விசாரிக்க உள்ளதாகவும் விசாரிக்கப்பட வேண்டிய கேள்விகளை தான் விசாரிக்க இருக்கிறோம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

*மேலும் சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்காலாமா என்பது மட்டும் குறித்து விசாரிக்கப்போவதில்லை எனவும் மத விஷயங்களில் பாகுபாடுகள் காட்டலாமா? அதை கடைபிடிக்கலாமா? என்பது குறித்து நுணுக்கமாக கவனிக்க இருக்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

*குறிப்பாக, 5 நீதிபதிகள் அமர்வில் எழுப்பப்பட்ட கேள்விகளை மட்டுமே விசாரிக்க உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். தேவையில்லாத வாதங்களை கேட்டுக்கொண்டிருக்க முடியாது எனக்கூறிய நீதிபதிகள், வழக்கில் வாதாடும் வழக்கறிஞர்களை அழைத்து, வருகிற 17ம் தேதி, உச்சநீதிமன்ற பதிவாளர் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

*அப்போது, யார், யார் என்னென்ன வாதாடப் போகிறார்கள் என்பதையும், எவ்வளவு நேரம் வாதாடப் போகிறார்கள் என்பதையும் முடிவு செய்ய வேண்டும் என்றும், நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, சபரிமலை வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நீதிபதிகள் ஆணையிட்டனர்.

வழக்கின் பிண்ணனி

*சபரிமலையில், அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதித்து உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது.

*இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் இருந்தநிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 56 மேல்முறையீட்டு மனுக்கள் உள்ளிட்ட 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

*இந்த மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. விசாரணையைப் பெரிய அமர்வுக்கு மாற்றுவதாகக் கடந்த நவம்பர் 14ம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.

*இருந்தும், சபரிமலை விவகாரத்தில் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பரில் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் எதுவும் தெரிவிக்கவில்லை.

 *தொடர்ந்து, சபரிமலை தொடர்பான வழக்குகளை தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.

*தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தவிர, இந்த அமர்வில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, அஷோக் பூஷண், எல்.நாகேஸ்வர ராவ், மோகன் எம். சந்தானகவுடர், எஸ்.அப்துல் நசீர், ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.


Tags : Sabarimala , Superior Court, Adjournment, Supreme Court, Session, Inquiry
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு