×

மசினகுடி அருகே ரிவால்டோ யானை உலா: சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

ஊட்டி: மசினகுடி பகுதியில் சாலையில் உலா வரும் ரிவால்டோ காட்டு யானைக்கு  சுற்றுலா பயணிகள் உணவு அளிப்பதோ, அதன் முன்பு நின்று செல்பி எடுப்பது போன்ற  செயல்களில் ஈடுபட வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது. நீலகிரி  மாவட்டம் முதுமலை புலிகள் காப்பத்திற்குட்பட்ட சீகூர் வனச்சரகத்தில்  அண்மைகாலமாக நீண்ட தந்தங்களுடன் காட்டு யானை ஒன்று கம்பீரமாக உலா வருகிறது.  இந்த யானை உள்ளூா் மக்களுக்கு எவ்வித தொந்தரவும் செய்யாமல் அவா்களுடன்  நெருக்கமாக இருந்து வருகிறது. இங்கு உள்ள தனியார் ரிசாா்ட் உாிமையாளர் அந்த யானைக்கு ரிவால்டோ என பெயாிட்டு அழைத்து வந்தார். இந்த யானை  மசினகுடி-தெப்பக்காடு சாலை மற்றும் குடியிருப்புகளை ஒட்டிய பகுதிகளில் உலா  வருகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனா்.  

ரிவால்டோ  யானை பார்க்க சாதுவாக இருந்தாலும், தொந்தரவு செய்வதால் கோபம் ஏற்பட்டு  தாக்க கூடிய அபாயம் உள்ளது. எனவே அதற்கு உணவு அளிப்பது, செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் கூறியிருப்பதாவது, கடந்த சில ஆண்டுகளாக ஆண் காட்டு யானை ஒன்று மசினகுடி, மாவனல்லா,  பொக்காபுரம், வாழைத்தோட்டம் மற்றும் சீகூர் ஆகிய பகுதிகளில் நடமாடி  வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு பொக்காபுரம் பகுதியில் மற்ற காட்டு  யானைகளுடன் நடந்த சண்டையில் அந்த யானைக்கு காயம் ஏற்பட்டதால், வனத்துறை  சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாகவே இப்பகுதியில்  உலா வரும் இந்த யானையால் இதுவரையில் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும்  ஏற்படவில்லை. மனிதர்களுடன் நன்றாக பழகும் அந்த யானைக்கு ரிவால்டோ என  பெயரிட்டு அழைக்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த யானை மாவனல்லா, மசினகுடி  சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள் சாலையோரங்களில் அதிகம் தென்படுகிறது.  உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த யானைக்கு அருகில் செல்வது,  உணவு அளிப்பது, சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுப்பது  போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த யானை பார்ப்பதற்கு  சாதுவாக தோன்றினாலும் இயற்கையில் இது ஒரு காட்டு யானை என்பதால் எந்த  நேரத்திலும், சுற்றி ஏற்பட கூடிய இடையூறுகளால் உந்தப்பட்டு, கோபமுற்றோ,  அறியாமலோ உயிர் சேதம், பொருட்சேதம் ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. எனவே  பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எவரும் இதன் அருகில் செல்லவோ,  உணவளிக்கவோ மற்றும் புகைப்படம் எடுக்க கூடாது. குடியிருப்பு பகுதிக்கு  வரும்பட்சத்தில் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு  துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

Tags : Rivaldo ,Masinagudi ,forest department ,elephant stroll , Masinagudi, Rivaldo, Elephant Surf
× RELATED உதகை அருகே மசினகுடி வனப்பகுதியில் காட்டுத்தீ..!!