×

விரிசலடையும் ஜெட்டி பாலம் சுவர்: அலைகளின் தடுப்புகள் சேதம்

கீழக்கரையில்: கீழக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஜெட்டி பாலம் சேதமடைந்துள்ளதால் சீரமைத்து மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கீழக்கரையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் ரூ.5 கோடியே 31 லட்சம் செலவில் மீனவர்கள் பயன்பாட்டிற்கு கட்டி முடிக்கப்பட்ட கடற்கரை ஜெட்டி பாலத்தின் பல பகுதிகள் உடைந்து விரிசலும் காணப்படுகிறது. மேலும் பாலத்தையொட்டி அலைகளின் தடுப்புக்காக சுற்றிலும் கட்டப்பட்டுள்ள சுவர் பகுதியும் உடைந்து காணப்படுகிறது. பழைய ஜெட்டி பாலம் சேதமடைந்ததால் இப்பாலம் கட்டப்பட்டது. தற்போது இந்த பாலம் சேதமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பாலம் திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே இதுபோன்று சேதம் ஏற்பட்டதை 2012ல் அமைச்சர்கள் பார்வையிட்டு சென்றனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தற்போது மேலும் பல பகுதிகளிலும், சுற்றுப்புற சுவரும் சேதமடைந்துள்ளதோடு விரிசலும் ஏற்பட்டுள்ளது. படகுகள் இப்பாலத்தின் ஓரங்களில் கட்டப்பட்டு மீன்கள் படகுகளிலிருந்து இறக்கப்படுகிறது. இவ்வாறு இறக்கப்படும் மீன்களை ஏற்ற வாகனங்கள் பாலத்தின் மேலேயே இயக்கப்பட்டு அங்கிருத்து மீன்கள் எடுத்து செல்லப்படுகிறது. இந்த சூழலில் பாலம் கடுமையாக சேதமடைந்திருப்பது பெரும் விபத்து ஏற்பட அதிகமான வாய்ப்பு உள்ளது. ஆகவே உடனடியாக சமபந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பாலம் திறக்கப்படும் போது சுமார் ஐந்து சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டது. அதுவும் சில மாதங்களிலேயே பழுதடைந்து விட்டது. இதுகுறித்து கீழக்கரை நுகர்வோர் நலச்சங்க செயலாளர் செய்யது இப்ராஹிம், மீன்வளத் துறைக்கு கடந்த மே மாதம் 25ம் தேதி மனு அனுப்பியிருந்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, இந்த ஜெட்டி பாலம் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், இங்கு குடிகாரர்களின் தொல்லை அதிகமாகிறது. மேலும் பல கெட்ட காரியங்களுக்கும் உதவுகிறது. ஆகவே இந்த பாலத்தில் தெருவிளக்குகள் அமைத்து தரவேண்டும் என்று கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து மீன்வளத்துறை நகராட்சி மூலம் இப்பாலத்தில் ஹைமாஸ் விளக்கு அமைத்து கொள்ளலாம் என்று 28 மே 2018 இல் நகராட்சிக்கு உத்தரவு கொடுத்துள்ளதாக பதிலளித்தது. ஆனால் இன்று வரை அந்தப் பாலத்தில் ஹைமாஸ் விளக்கோ அல்லது தெரு விளக்கோ அமைக்கவில்லை. ஆகவே இதுகுறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விளக்கு அமைப்பதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதுபற்றி காதர் கூறியதாவது, இலங்கை அருகே அமைந்துள்ள கீழக்கரை கடற்கரை மிக முக்கியத்துவம் மிக்க பகுதியாக விளங்குகிறது. இப்பகுதியை கடற்கரைப் பகுதியில் பாலக்கோடு அமைந்துள்ள பகுதிகள் இருட்டில் கிடைக்கிறது. இப்பகுதியை சீரமைத்து கண்காணிப்பு கேமரா வைப்பதோடு, மின்விளக்குகளை உடன் அமைக்க அரசு முன்வர வேண்டும் என்றார்.

Tags : Cracked Jetty Bridge Wall: Waves block , Damage to the jetty bridge, wall, barricades
× RELATED வேதை அருகே பாஜ அலுவலகம் திறப்பு:...