×

சென்னை விமான நிலையம் அருகே போகியன்று அதிக புகையை வெளிப்படுத்தும் பொருட்களை எரிக்காதீர்கள் : மக்களுக்கு நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தல்

சென்னை: சென்னை விமான நிலையம் அருகே போகியன்று அதிக புகையை வெளிப்படுத்தும் பொருட்களை எரிக்க கூடாது என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழைய பொருட்களை எரிப்பது பழையன கழிதல் என்பதற்கான அடையாளமாக செய்யப்படுகிறது. இந்த நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், துடைப்பங்கள், தேவையற்ற விவசாய கழிவுகள் உள்ளிட்டவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள். கிராமங்களில் கடைபிடிக்கப்படும் இப்பழக்கம் சுற்றுச்சூழலுக்கு தீமையை ஏற்படுத்தாத ஒன்றாகும்.

ஆனால் தற்போது நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் டயர், ரப்பர், பிளாஸ்டிக் உள்ளிட்ட செயற்கை பொருட்கள் எரிக்கப்படுகிறது. இதனால் நச்சுப்புகை மூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு சுவாச நோய்கள், இருமல், நுரையீரல், கண், காது, மூக்கு எரிச்சல் உட்பட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. நச்சுக்காற்றாலும், கரிப்புகையாலும் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. சென்னை விமான நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் அதிகாலை நேரத்தில் இதுபோன்று எரிக்கப்படும் பொருட்களால் உண்டாகும் புகை காரணமாக ஆண்டுதோறும் விமான சேவை பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் போகி பண்டிகை அன்று அதிக புகையை வெளிப்படுத்தும் பொருட்களை எரிக்காதீர்கள் என்று விமான நிலைய ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; விமான சேவை பாதிப்பு ஏற்படாத வகையிலும், பயணிகள் பாதிக்காத வகையிலும் சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமான புகையை வெளிப்படுத்தும் கழிவு மற்றும் பழைய பொருட்களை எரிக்க வேண்டாம். இதனால் தடையின்றி விமான சேவை நடைபெறும்.

மீனம்பாக்கம் விமான நிலையத்தை சுற்றியுள்ள மக்கள் விமான சேவை பாதிப்பின்றி செயல்பட ஒத்துழைக்க வேண்டும் என கூறியுள்ளது. முன்னதாக 2018-ம் ஆண்டு போகி பண்டிக்கையின்போது கழிவு மற்றும் பழைய பொருட்களை கொளுத்தியதால் விமான போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் 73 விமானங்கள் புறப்படுவதிலும், 45 விமானங்கள் தரை இறங்குவதிலும் பாதிப்பு ஏற்பட்டது. பல விமானங்கள் திருப்பி விடப்பட்டன. கடந்த ஆண்டும் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : airport ,Chennai , Chennai Airport, Bogey
× RELATED அதிக பயணிகள் கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3வது இடம்