×

இனப்பெருக்கத்திற்காக சரணாலயத்தில் 40 வகை பறவை தஞ்சம்

* புதிதாக மரக்கன்றுகளை நடவேண்டும்
* சாலைகள் சீரமைக்கப்படுமா?

சாயல்குடி: மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயத்திற்கு சுமார் 40 வகை பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்துள்ளது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர். கடலாடி அருகே மேலச்செல்வனூர், முதுகுளத்தூர் அருகே உள்ள சித்திரங்குடி, கீழகாஞ்சிரங்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள கண்மாய்களில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது, இப்பகுதியில் ஆண்டு தோறும் பருவ மழைக்காலம் துவங்கும் மாதமான செப்டம்பர் மாத கடைசி மற்றும் ஆகஸ்ட் மாதம் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற வெளிநாட்டுகளில் இருந்தும், உள்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தாழைகொத்தி, செங்கல், நத்தைகொத்தி, கிங்பிஷர், கரண்டிவாய் மூக்கான், வில்லோவால்பவர், ஆஸ்திரேலேயா பிளம்மிங்கோ, நாரை, கொக்கு வகைகள், கூழைகிடா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வகையான பறவைகள் வருவது வழக்கம்.

இங்குள்ள தட்பவெப்ப சூழ்நிலையில் இனப்பெருக்கம் செய்வதற்கும், தேவையான இரைகள் கிடைப்பதால் பலமைல் தூரம் கடல் கடந்து பறந்து வருவது வழக்கம். இங்குள்ள கண்மாயிலுள்ள நாட்டுகருவேல மரங்களில் செப்டம்பர் முதல் மார்ச் மாதம் வரை தங்கி, முட்டையிட்டு குஞ்சு பொறித்து, குஞ்சுகளுடன் பறந்து செல்லும். கிராமங்களுக்கு விருந்தாளிகள் போல் வந்து ஆரவாரத்துடன், வட்டமிட்டு இங்கும், அங்கும் பறந்து மெல்லிசை, இனிய ரீங்காரத்துடன் இருக்கும் பறவைகளுக்காக இக்கிராம மக்கள் பல வருடங்களாக தீபாவளி, உள்ளூர் திருவிழா, சுபகாரியங்களுக்கு கூட வெடி வெடிப்பது கிடையாது. இப்படி ரம்மீயமான சூழ்நிலை தரும் பறவைகள் தொடர் வறட்சியால் கண்மாய் வறண்டு கிடந்ததால் கடந்த 8 வருடங்களாக வராமல் இருந்தது.

இந்நிலையில் இந்தாண்டு மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர் கண்மாய்கள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மராமத்து செய்யப்பட்டு ஆழப்படுத்தப்பட்டது. அக்டோபர் மாதம் முதல் பருவ மழையான வடகிழக்கு பருவமழை பெய்தது. இதனால் கண்மாய்கள் ஓரளவு நிறைந்தது. இதனால் வழக்கம் போல் இந்தாண்டு சுமார் 40 வகைக்கும் மேலான பறவைகள் வந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அவை முட்டையிட்டு அடைகாத்து வருகின்றன. குஞ்சுகள் வந்தவுடன் வழக்கம் போல் பறந்து சென்றுவிடும். பறவைகளை பார்வையிட பள்ளி, கல்லூரி மாணவர்கள், சுற்றுலாபயணிகள் மற்றும் அருகிலுள்ள வெளியூர் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதுகுறித்து பள்ளி மாணவி பூமிகா கூறும்போது, ‘பள்ளியின் சார்பாக பறவைகள் சரணாலயத்தை பார்வையிட அழைத்து வந்தனர். பார்வையாளர் உயர்கோபுரத்திலிருந்து தொலைநோக்கியை வைத்து பார்த்து ரசித்தோம்’ என்றார்.

சுற்றுலா பயணிகள் கூறுகையில், ‘கிழக்கு கடற்கரை சந்திப்பிலிருந்து பறவைகள் சரணாலயம் வந்து செல்லும் சாலை படுமோசமாக உள்ளது. பார்வையாளர்கள் பார்க்க ஒரு உயர்கோபுரம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளதால் அதன் மூலம் பார்க்க இடையூறாக உள்ளது. அருகிலிருக்கும் மற்றொரு உயர்கோபுரத்தை சீரமைக்க வேண்டும். சிறுவர் பொழுதுபோக்கு மையத்துடன், உணவு அருந்தும் கூடம், ஓய்வறை அமைக்க வேண்டும். கண்மாயிலுள்ள பல மரங்கள் பட்டுபோய் கிடக்கிறது. புதியதாக மரக்கன்றுகளை நட வேண்டும். அருகில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே தற்போது பறவைகள் வந்திருப்பதை தெருவிக்க தமிழ்மொழியோடு ஆங்கிலமொழியிலும் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என்றனர்.

Tags : sanctuary ,Sanctuary in Bird Refuge , Sanctuary, Bird Refuge
× RELATED கொடைக்கானல் வனச்சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்..!!