×

பீம் ஆப்ஸ் பயன்படுத்துகிறீர்களா? மாதாந்திர பில் கட்டும் தேதியை மறந்துடுங்க: புது வசதி வருது

புதுடெல்லி: வங்கி கணக்கில் இருந்து தானாகவே மாதாந்திர பில் தொகையை எடுத்துக்கொள்ள அனுமதி தருவதுபோல், இனி, யுபிஐ பீம் ஆப்ஸ்கள் மூலமாகவும் மாதாந்திர பில் தொகையை செலுத்த முடியும். இதற்கான அனுமதியை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது மின்சார கட்டணம், போன் பில் உட்பட பல்வேறு கட்டணங்கள் மாதாந்திர அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் கட்ட வேண்டி வரும். பெரும்பாலானவர்களுக்கு கடைசி நாளில்தான் இதுபற்றி நினைவுக்கு வரும்.

சிலர் வங்கிக் கணக்கில் இருந்து பில் தொகையை எடுத்துக்கொள்ள அனுமதி கடிதம் கொடுத்து விடுகின்றனர். மற்றவர்கள், கடைசி நாளில் பார்த்துக்கொள்ளலாம் என இருந்து, மறந்து விடுகின்றனர். பின்னர் தாமத கட்டணமும் சேர்த்து கட்டுகின்றனர். இவர்களுக்காகவே யுபிஐ மூலம் புதிய வசதி வருகிறது. வங்கி கணக்கில் இருந்து தானாகவே பில் தொகையை செலுத்தும் வசதியை யுபிஐ பீம் அடிப்படையில் இயங்கும் ஆப்ஸ்கள் மூலமாகவும் இனி செயல்படுத்த முடியும்.

இதுதொடர்பாக, தேசிய பண பரிவர்த்தனை கழகத்துக்கு ரிசர்வ் வங்கி அனுப்பிய கடிதத்தில், ‘‘மின்னணு முறையில் குறிப்பிட்ட கால முறையிலான கட்டணங்களை செலுத்துவதற்கு அனுமதி வழங்கும் வசதி, யுபிஐ பரிவர்த்தனைக்கும் விரிவு படுத்த அனுமதி வழங்கப்படுகிறது’’ என தெரிவித்துள்ளது.
இதன்படி, மின்சார கட்டணம், போன் கட்டணம் போன்ற கால முறையிலான கட்டணங்களை வங்கி கணக்கில் இருந்து உரிய தேதியில் தானாகவே செலுத்த வாடிக்கையாளர்கள் அனுமதி வழங்கலாம். வங்கி கணக்கில் எந்த தேதியில் பில் தொகைக்கான பணத்தை எடுத்துக்கொள்வது என்பதை  வாடிக்கையாளர்களே தங்கள் வசதிக்கேற்ப முடிவு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : facility , Beam Apps, Bill, Date, Forget, New Feature, Coming
× RELATED பிரதமர் வீட்டு வசதி திட்ட முறைகேடு: அறிக்கை தர ஐகோர்ட் ஆணை