×

மழைகாலம் முடிந்தும் வெளியாகாத அறிவிப்பு கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு எப்போது?: திட்டமிட்டபடி தொடங்க ஆர்வலர்கள் வலியுறுத்தல்

மதுரை: வடகிழக்கு பருவமழை காலம் முடிந்தும், அரசு உத்தரவு வெளியிடாததால் தமிழர்களின் நாகரிக தொன்மையை கண்டறியும் கீழடி 6ம் கட்ட அகழாய்வு திட்டமிட்டபடி துவங்குமா என கேள்வி எழுந்துள்ளது. மதுரை அருகே வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள கீழடியில், மத்திய அரசின் தொல்லியல் துறை  சார்பில் 2013 முதல் 2016 வரை 3 ஆண்டுகள் நடத்திய அகழாய்வில் தமிழர் நாகரிக தொன்மை உலகுக்கு பறைசாற்றப்பட்டது. இந்த அகழாய்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. உடனடியாக அந்த அகழாய்வை தொடர அனுமதிக்காமல் மத்திய அரசு நிறுத்தியது. ஐகோர்ட் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து, தமிழக அரசின் தொல்லியல் துறை அகழாய்வு நடத்தியது.  நான்காம் கட்ட ஆய்வில், தமிழர்கள் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகத்துடன் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் அறிவியல்பூர்வமாக நிரூபணமானது.

முதன்முதலில் மத்திய தொல்லியல் துறை அகழாய்வில் எடுக்கப்பட்ட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் அங்கிருந்து தூக்கிச்செல்லப்பட்டு, பெங்களூரூ, சென்னையில் சீல் வைத்து பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. தமிழக தொல்லியல் துறை அகழாய்வில் எடுக்கப்பட்ட தொல்பொருட்கள் மதுரையில் உலக தமிழ்ச்சங்க அரங்கில் பொதுமக்கள் பார்வைக்கு கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் தொல்லியல் துறை 5ம் கட்ட அகழாய்வினை 2019, செப்டம்பரில் நடத்தி முடித்தது.  6ம் கட்ட அகழாய்வு வடகிழக்கு பருவமழை காலம் முடிந்து 2020, ஜனவரியில் துவங்கும் என தொல்லியல் துறை அறிவித்தது.  மத்திய அரசின் அனுமதியை எதிர்பார்த்து தமிழக அரசு காத்திருந்தது. சமீபத்தில் இந்த அனுமதியை மத்திய தொல்லியல் துறை வழங்கிவிட்டது.

கீழடியில் மொத்தம் 110 ஏக்கர் பரப்பில் அகழாய்வு நடத்தப்பட்டுள்ளது. அடுத்து கீழடி அருகே  மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய கிராமங்களில் நிலங்கள் பெற்று அகழாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 6ம் கட்ட அகழாய்வை துவங்குவதற்கான உத்தரவை தமிழக அரசின் தொல்லியல் துறை இதுவரை பிறப்பிக்காமல் இழுத்தடிக்கிறது. ஜனவரியில் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மீண்டும் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட அகழாய்வு தாமதமாகி வருகிறது. உடனடியாக அகழாய்வுப்பணிகளை துவக்கவேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கீழடி அகழாய்வு முழுமை பெற 10 ஆண்டுகளாகும். அது இடையில் தடங்கலாகி நிற்கக்கூடாது’’ என்றார்.


Tags : end ,Activists ,announcement , Rainy days, unreleased announcement, downstairs, phase 6 excavation, when ?
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...