×

ஓசூர் அருகே தாயை பிரிந்து வழி தவறி ஊருக்குள் புகுந்த குட்டி யானையால் பரபரப்பு: மயக்க ஊசி போட்டு பிடித்தனர்

சூளகிரி: சூளகிரி அருகே தாயை விட்டு பிரிந்து வழி தவறிய குட்டி யானை, ஊருக்குள் புகுந்தது. அப்பகுதி இளைஞர்கள் அதனை சீண்டி விளையாடியதால் பீதியடைந்து சிதறி ஓடிய குட்டியை, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.  கர்நாடகா மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து, இடம்பெயர்ந்து வந்த 60 யானைகள், கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி வழியாக ஓசூர் சானமாவு, ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு  இடம் பெயர்ந்தன. பின்னர்,கடந்த 2ம் தேதி அதிகாலை, அங்கிருந்து வெளியேறிய யானைகள் உத்தனப்பள்ளி, லாலிக்கல்,நாயக்கனப்பள்ளி வழியாக போடூர்பள்ளம் வனப்பகுதிக்கு வந்து சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டன. இதையொட்டியுள்ள கிராம மக்கள் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் வனப்பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் வாகனங்களில் கவனத்துடன் செல்லுமாறும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்ததோடு, கண்காணிப்பு பணியையும் முடுக்கி விட்டனர்.

இந்நிலையில், யானை கூட்டத்தில் இருந்து வழி தவறி பிரிந்த குட்டி யானை ஒன்று, நேற்று காலை 7 மணியளவில் உத்தனப்பள்ளி அருகே ஓசூர்-ராயக்கோட்டை சாலையை கடக்க முயன்றது. அப்போது, அந்த வழியாக வாகன போக்குவரத்து அதிகமாக இருந்ததால், பீதிக்குள்ளான குட்டி யானை பிளிறியவாறு அங்குமிங்கும் ஓடியது. சத்தம் கேட்டு அருகில் உள்ள அகரம், பீர்ஜேப்பள்ளி, நாயக்கனப்பள்ளி, டி.குருபரப்பள்ளி, ஓபேபாளையம், கொம்பேப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திரண்டனர். மக்கள் கூட்டத்தை கண்டதும் குட்டி யானை மிரட்சியடைந்தது. மேலும், தாயை பிரிந்த ஏக்கத்தில் எங்கு செல்வது, என்ன செய்வது என தெரியாமல், ஊர் மக்களின் கூச்சலுக்கு பயந்து பதறி ஓடிக்கொண்டிருந்தது. அப்போது,கிராம மக்களில் சிலர் குட்டி யானையை படம் பிடிப்பதற்காக, செல்போனை வைத்துக்கொண்டு பின்தொடர்ந்து சென்றனர். இதனால், மேலும் பீதியடைந்த குட்டி யானை, பதிலுக்கு கிராம மக்களை முட்டுவது போல் விரட்டியது. சிலர், குட்டி யானையை சீண்டி விளையாடி கொண்டிருந்தனர். நண்பகல் வரை இது நீடித்ததால், அப்பகுதியே களேபரம் ஆனது.

இதுகுறித்த தகவலின்பேரில்,மதியம் 2 மணியளவில் ஓசூரில் இருந்து வனத்துறையினர் விரைந்து வந்தனர். முதலில் கிராம மக்கள் அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து, குட்டி யானையை தனிமைப்படுத்தி ஆசுவாசப்படுத்தினர்.ஆனாலும், அதிர்ச்சியில் இருந்து மீளாத குட்டி யானை ஆக்ரோஷத்துடன் வனத்துறையினரை தாக்க முயன்றது. இதனையடுத்து, பிரத்யேக துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை குட்டி யானையின் மீது செலுத்தினர். இதனால் அது வயல்வெளியில் சாய்ந்தது.  பின்னர் வனத்துறை ஊழியர்கள், வலையை வீசி குட்டி யானையை பிடித்து அது மிரளாமல் இருப்பதற்காக, முகத்தை துணியால் கட்டி மறைத்தனர். தொடர்ந்து,கயிறு கட்டி அதனை போடூர்பள்ளம் காப்பு காட்டில் கொண்டு சென்று விடுவதற்காக வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

Tags : baby elephant ,Hosur Hosur , Hosur, mother separated, baby elephant
× RELATED கர்ப்பிணி யானையை அன்னாசிப்பழத்தில்...