×

திருவொற்றியூர் பகுதியில் வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்: அதிகாரிகளுடன் திமுகவினர் வாக்குவாதம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் பகுதியில் வாக்காளர் பட்டியலில் இறந்தவர், இடம் மாறி சென்றவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததால் அதிகாரிகளுடன் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 23ம் தேதி தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டது. இதன்படி வாக்காளர் பட்டியலில் 18 வயது பூர்த்தியானவர்கள் பெயரை சேர்ப்பது, விடுபட்டவர்களின் பெயர்களை சேர்ப்பது, பெயர் நீக்கம், திருத்தம் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

கடந்த 4, 5, 11 மற்றும் 12ம் தேதிகளில் அந்தந்த பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை திருவொற்றியூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம் நடந்தது. திருவொற்றியூர் திமுக கிழக்கு பகுதி செயலாளர் தி.மு.தனியரசு, பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சி கணேசன், நிர்வாகிகள் பொன்னி வளவன், இளவரசன் ஆகியோர் பங்கேற்று, வாக்காளர் பட்டியலை சரிபார்த்தபோது இறந்தவர் மற்றும் முகவரி மாறி  சென்றவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் திமுகவினர் அங்கிருந்த அதிகாரிகளிடம், ‘‘நாங்கள் பலமுறை மனு எழுதி கொடுத்தும் மீண்டும், மீண்டும் போலி வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறுகிறது,’’ என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அலுவலர்கள், ‘‘மீண்டும் ஒருமுறை மனு எழுதி கொடுங்கள், தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கிறோம்’’ என சமாதானம் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Thiruvottiyur ,DMK ,governor , Thiruvottiyur area, voter list, deceased, name, officer, DMK, argument
× RELATED திருவொற்றியூர் விம்கோ நகரிலிருந்து...