நைஜீரிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம் துப்பாக்கி சண்டை மூலம் கடத்தப்பட்ட தமிழக பொறியாளர் பத்திரமாக மீட்பு

சென்னை: தாம்பரம் முடிச்சூர் சாலை, வெற்றி நகரைச் சேர்ந்தவர் ஆனந்தன். சென்னை விமானநிலைய காவல் நிலைய உதவி ஆய்வாளர். இவரது மகன் வருண்ராஜ் (29). இவர், மரைன் இன்ஜினியரிங் முடித்துவிட்டு கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் முதல் எம்வி அம்பிகா என்ற எண்ணை சரக்கு கப்பலில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி 2ம் தேதி நள்ளிரவில் நைஜீரியா நாட்டில் உள்ள ரமோஸ் நதிக்கரையோரம் இவர் பணியாற்றிய கப்பல் வந்து கொண்டிருந்தது. அந்த கப்பலில் 6 பாதுகாவலர்கள், தமிழக பொறியாளர் வருண்ராஜ், 2 ரஷ்ய நாட்டு பொறியாளர்கள் இருந்தனர். கடற்கொள்ளையர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் கப்பலுக்குள் ஏறி துப்பாக்கியால் சுட்டு நான்கு பேரை கொன்று விட்டு பொறியாளர் வருண்ராஜ் உள்பட 3 பேரை கடத்திவிட்டனர்.

பின்னர் நைஜீரியா கடற்படையினர் வருண்ராஜ் உட்பட 3 பேரை பத்திரமாக மீட்டனர். அதோடு கொள்ளையர்களிடம் இருந்து கப்பலையும் மீட்டு இந்தியாவிடம் ஒப்படைத்தனர். இதன் பின்னர் வருண்ராஜ் நைஜீரியாவில் இருந்து டெல்லி வந்தார். பின்பு அவர் நேற்று மாலை ஏர் இண்டிய விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருடைய பெற்றோர் கட்டித்தழுவி கண்ணீர்மல்க வரவேற்றனர். வருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஜனவரி 2ம் தேதி இரவு 10.30 மணிக்கு ரமோஸ் ரிவர் பகுதியில் கடற்கொள்ளையர்கள் எங்களை சிறைபிடித்தனர். பொதுவாக நைஜீரியாவின் ரமோஸ் பகுதி கடற்கொள்ளையர்கள் அட்டகாசம் மிகுந்த இடம், கடந்த ஓர் ஆண்டில் மட்டும் சுமார் 15 பேர் கடத்தப்பட்டுள்ளனர்.

இதனால் நைஜீரியன் நேவி 6 பேர் எங்களுக்கு பாதுகாப்புக்காக வந்தனர். அதில் 4 பேர் சுட்டுக் கொள்ளப்பட்டனர். மீதம் இருந்த 2 பாதுகாவலர்களால் சமாளிக்க முடியவில்லை. மற்றவர்கள் தப்பிவிட்டனர்.  கொள்ளையர்கள் எங்களை கடத்திச் சென்றனர். ஆனால் படகு பழுதடைந்துவிட்டது. இதனால் துடுப்பு போட்டு கொள்ளையர்களுடன் நாங்களும் சேர்ந்து படகை இயக்கினோம். 5 நாட்களாக குடிக்க தண்ணீரும் உணவும் இன்றி தவித்தோம். நாங்கள் கடத்தப்பட்ட தகவலறிந்து நைஜீரிய கடற்படை வந்து துப்பாக்கி சண்டை நடத்தினர். அப்பொழுது ஒரு கொள்ளையன் தப்பி ஓடிவிட்டான். அதன் பின்பு 4 மணி நேரம் துப்பாக்கி சண்டைபோட்டு நைஜீரியா கப்பல் படையினர் எங்களை பத்திரமாக மீட்டனர். நைஜீரியா மற்றும் இந்திய தூதரகம் உதவியுடன் நாங்கள் பத்திரமாக மீட்கப்பட்டோம். எங்கள் விடுதலைக்காக இந்திய அரசு அதிகாரிகள், இந்திய தூதரகம் மிகவும் துரிதமாக செயல்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>