×

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டிதான் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்: தயாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர், மத்திய சென்னை திமுக எம்பி

பொருளாதார சரிவு இரவோடு, இரவாக நடக்கவில்லை. 2014ல் மத்தியில் மோடியின் பாஜ ஆட்சி பொறுப்பேற்றது முதல் மேற்கொள்ளும்  தவறான பொருளாதார கொள்கை தான் இந்த வீழ்ச்சிக்கு காரணம். முதலில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது அவர்கள் செய்த முட்டாள்தனம். கருப்பு பணத்தை ஒழித்து பெயர் வாங்குவதாக நினைத்து அவசர கதியில் மோடி செய்தது பொருளாதார வீழ்ச்சிக்கு முதல் காரணம். ஒரு சுனாமி அடித்தால் எந்த பாதிப்பு இருக்குமோ அந்த அளவுக்கு பண மதிப்பிழப்பால் மக்கள் பாதிக்கப்பட்டனர். அப்போது பிரதமர் மோடி மார்த்தட்டி சொன்னார். 60 நாட்களுக்குள் கருப்பு பணத்தை மீட்டு வருவேன் என்று கூறினார். ஆனால், இப்போது வரை ஒரு ரூபாய் கருப்பு பணத்தைகூட மீட்டு கொண்டு வரவில்லை. வங்கி ஊழியர்கள், செல்லாததாக அறிவிக்கப்பட்ட நோட்டுகளுக்கு பதில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தரும் வேலையை தான் செய்தனர்.  மக்கள் வேலையை விட்டு விட்டு,  வங்கி வாசலிலும், ஏடிஎம் வாசலிலும் கியூவில் நிற்கும் அவலம் காணப்பட்டது. ஒழுங்காக சென்று கொண்டிருந்த ரயில் தடம் புரண்டால் என்னவாகுமோ அந்த காரியத்தை தான் பணமதிப்பிழப்பு செய்தது.

இந்த கெட்ட பெயரில் இருந்து தப்பிக்க பாஜ அரசு, ஒரே நாடு ஒரே வரி என்கிற பெயரில் அவசர கோலத்தில் ஜிஎஸ்டி வரியை கொண்டு வந்து, எங்கும் இல்லாத அளவு அதிகபட்சமாக 28 சதவீதம் வரியை போட்டது. ஆனால், மக்கள் கணிசமாக பயன்படுத்தும் பெட்ரோலுக்கு ஒரே வரி கிடையாது. ஒவ்வொரு மாநிலங்களும்,  மாநிலங்களுக்கு ஏற்ப பெட்ரோல் வரியை உயர்த்தி கொண்டனர். சாராயத்துக்கும் இதே நிலை தான். ஜிஎஸ்டி வரியால் அதிகமாக பாதிக்கப்பட்டது சிறு தொழில் உற்பத்தியாளர்கள்தான். உதாரணமாக, ரூ.10 லட்சத்துக்கு பொருட்களை தயார் செய்தால், அதில் ரூ.2.80 லட்சத்துக்கு வரி கட்ட வேண்டும். அந்த பொருட்கள் விற்காமல் திருப்பி வந்தால் ரிபண்ட் பெற 3 ஆண்டு இழுத்தடிக்கப்பட்டனர். இதன் விளைவு பலரும் தொழிலை விட்டே சென்று விட்டனர்.  கடந்த 6 மாதத்துக்கு முன்பு நிதி அமைச்சர் உத்தரவின் பேரில்  ரிபண்ட் பணம் தரப்பட்டது. அது வாங்கிய கடனை வட்டி கட்டுவதற்கு கூட போதுமானதாக இல்லை.

அடுத்தடுத்து, வராக்கடனால் வங்கிகள் நஷ்டத்தில் இயங்க ஆரம்பித்ததால் புதிதாக சேமிப்பு கணக்கை தொடங்கவே மக்கள் அச்சப்படுகின்றனர். நஷ்டத்தில் இருந்து வங்கிகளை மீட்க அடுத்து, வங்கிகள் இணைப்பில் இறங்கியது அரசு.  குறிப்பாக, 7 வங்கிகளை ஒன்றாக இணைக்கின்றனர். அப்போது,  6 வங்கி ஊழியர்களுக்கு  வேலை பறிபோகும். அதுமட்டுமின்றி சிறு தொழிலில் ஈடுபட்டோருக்கு வங்கிகள் கடன் தர அஞ்சுகிறது;  மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை. இப்போது தான், ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளனர். நோயாளி இறந்த பின்பு அவசர சிகிச்சை கொடுப்பதில் எந்த பயனும் இல்லை.  அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும் இந்த அரசு கவலைப்படுகிறது. பெரிய பணக்காரர்களுக்கு இந்த அரசு வரிவிலக்கு தருகிறது. சிறு, குறு தொழில்களை ஊக்குவிக்க அரசு திட்டங்களை கொண்டு வராவிட்டால் பொருளாதாரம் மீண்டும் நிலைத்து நிற்க முடியாது என்பதை அரசு உணரவில்லை. அரசின் தவறான கொள்கையால் ஐடி நிறுவனம் மட்டுமல்ல, எல்லா துறை நிறுவனமும் முடங்கி விட்டன; உற்பத்தி நின்று விட்டது; பணியாட்கள் வேலை நீக்கம் அதிகரித்து விட்டது. பல லட்சம் இளைஞர்கள் வேலை பறிபோய்க்கொண்டிருக்கிறது; இதை பார்த்து படிக்கும் இளைஞர்களுக்கு தங்கள் நிலை என்னவாகுமோ என அச்சம் உருவாகி விட்டது. அரசும் வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை.


Tags : Dayanidhi Maran ,DMK , Money Laundering, GST, Dayanidhi Maran, Former Union Minister, Central Madras, DMK MP
× RELATED அவதூறு பேச்சுக்காக எடப்பாடி பழனிசாமி...