×

ஜனாதிபதி விருது பெற்றவர் 2 தீவிரவாதிகளுடன் போலீஸ் டிஎஸ்பி கைது: காரில் அழைத்து சென்றபோது சிக்கினார்

காஷ்மீர்: தெற்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில், 2 தீவிரவாதிகளை அழைத்துக் கொண்டு சென்ற போலீஸ் டிஎஸ்பி கைது செய்யப்பட்டார். இவர் ஜனாதிபதி விருது பெற்றவர் என்று தெரிய வந்துள்ளது. காஷ்மீர் விமான நிலைய போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு (டிஎஸ்பி) தேவிந்தர் சிங் என்பவர், இரண்டு ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளுடன் காரில் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக, தெற்கு காஷ்மீர் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அதுல் கோயல் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள், டிஎஸ்பி மற்றும் தீவிரவாதிகள் செல்லும் காரை பிடிக்க விரைந்தனர். ​​தெற்கு காஷ்மீரின் குல்கத் மிர் பஜாரில், டிஎஸ்பியுடன் தீவிரவாதிகள் சென்ற காரை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், ஷோபியன் பகுதியிலிருந்து 2 தீவிரவாதிகள் பள்ளத்தாக்குக்கு  வெளியே பாதுகாப்பாக செல்வதற்காக தன்னுடைய காரில் டிஎஸ்பி அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள், லஷ்கர்-இ-தொய்பாவின் உயர் தளபதி நவீத் பாபு மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீனின் அல்தாப் என்று தெரியவந்துள்ளது. மேலும், தீவிரவாதிகளை காரில் அழைத்து சென்ற டிஎஸ்பி தேவிந்தர் சிங்கையும் அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  இவர் வீர செயலுக்காக ஜனாதிபதி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, தெற்கு காஷ்மீர் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அதுல் கோயல் கூறுகையில், ‘‘டிஎஸ்பி தேவிந்தர் சிங் தனது பொறுப்பை மறந்து செயல்பட்டுள்ளார். காரில் இருந்து இரண்டு ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது, இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு ஏ.கே. 47 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. டிஎஸ்பி-யின் செயல்பாடு துரதிர்ஷ்டவசமானது. விசாரணைக்கு பின் அவர் பணியில் இருந்து நீக்கப்படுவார்’’ என்றார்.

3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரின் டிரால் நகரின் குல்ஷன்போரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது, தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படை நடத்திய எதிர்தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்தவர்கள் ஹிஸ்புல் அமைப்பின் முக்கியமான தீவிரவாதிகள் என்று தெரியவந்துள்ளது.

Tags : recipient ,extremists ,Award recipient , Presidential Award recipient, with 2 extremists, police DSP, arrested
× RELATED கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பலுசிஸ்தான்...