×

சபரிமலையில் இளம்பெண்கள் தரிசனத்தை எதிர்க்கும் வழக்குகள் சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை: தலைமை நீதிபதி தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது

புதுடெல்லி: சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் ெசய்யலாம் என்ற தீர்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள  65 மேல்முறையீட்டு மனுக்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. சபரிமலையில், அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதித்து உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் இருந்தநிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 56 மேல்முறையீட்டு மனுக்கள் உள்ளிட்ட 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. விசாரணையைப் பெரிய அமர்வுக்கு மாற்றுவதாகக் கடந்த நவம்பர் 14ம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.

இருந்தும், சபரிமலை விவகாரத்தில் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பரில் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் எதுவும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து, சபரிமலை தொடர்பான வழக்குகளை தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தவிர, இந்த அமர்வில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, அஷோக் பூஷண், எல்.நாகேஸ்வர ராவ், மோகன் எம். சந்தானகவுடர், எஸ்.அப்துல் நசீர், ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். ஆனால், ‘சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு செய்யலாம்’ என்று கடந்த 2018, செப்டம்பரில் தீர்ப்பளித்த 5 நீதிபதிகள் அமர்வில் இருந்த பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தார். அவர், தற்போதைய 9 நீதிபதிகள் அமர்வில் இடம்பெறவில்லை. இதேபோல், மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்களை பெரிய அமர்வுக்கு மாற்றிய 5 நீதிபதிகள் அமர்வில் இருந்த ஆர்.எப்.நாரிமன், டி.ஒய்.சந்திராசூட் ஆகியோரும் இந்த அமர்வில் இடம்பெறவில்லை. இந்நிலையில், மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்கள், இன்று விசாரிக்கப்பட உள்ளன.

Tags : Supreme Court ,Prosecutions ,juveniles ,Sabarimala Supreme Court , Supreme Court , Investigate , Legal Prosecutions
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...