×

மத துன்புறுத்தலால் பாதித்தவர்களுக்கு குடியுரிமை மகாத்மா காந்தியின் விருப்பத்தைதான் மத்திய அரசு நிறைவேற்றி இருக்கிறது: பிரதமர் மோடி பேச்சு

கொல்கத்தா: ‘மத துன்புறுத்தலால் பாதித்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதை மகாத்மா காந்தி ஆதரித்துள்ளார். சுதந்திர போராட்ட தியாகிகளின் இந்த விருப்பத்தைதான் மத்திய அரசு இப்போது நிறைவேற்றி இருக்கிறது,’ என பிரதமர் மோடி கூறியுள்ளார். கொல்கத்தா துறைமுக கழக 150ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் புதுப்பிக்கப்பட்ட பாரம்பரியமிக்க கட்டிடங்களை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி ஆகியவற்றில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் கொல்கத்தா சென்றார். நேற்று முன்தினம் இரவு பேலூர் ராமகிருஷ்ணா மடத்தில் அவர்  தங்கினார். ராமகிருஷ்ண மடத்தில் ஒருநாள் இரவு தங்கிய முதல் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாமி விவேகானந்தர் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று காலை ராமகிருஷ்ண மடத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் கோயிலுக்கு சென்று மோடி வழிபட்டார். ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு மரியாதை செலுத்தினார். விவேகானந்தர் பிறந்த தினம் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அங்கு நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது: குடியுரிமை திருத்த சட்டம் பற்றி இளைஞர்கள் இடையே பல கேள்விகள் உள்ளன. சிலர் வதந்திகளால் தவறாக வழிந டத்தப்படுகின்றனர். குடியுரிமை திருத்த சட்டம், யாருடைய குடியுரிமையையும் பறிப்பது அல்ல. இது குடியுரிமை வழங்கும் சட்டம். மதரீதியிலான துன்புறத்தல்களை சந்திப்பவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு தேசத் தந்தை மகாத்மா காந்தியே ஆதரவாக இருந்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர்களின் விருப்பங்களைதான் தான் எனது அரசு செய்து வருகிறது. மகாத்மா காந்தி பல ஆண்டுகளக்கு முன் கூறியதை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம்.

குடியுரிமை திருத்த சட்டத்தை தெளிவாக புரிந்து கொண்டும், சிலர் அரசியல் நோக்கத்துக்காக  வேண்டும் என்றே வதந்தியை பரப்புகின்றனர். கடந்த 70 ஆண்டுகளாக சிறுபான்மையினரை ஏன் துன்புறுத்தினோம் என பாகிஸ்தான்தான் தற்போது பதில் அளிக்க வேண்டும். பாகிஸ்தானில் மனித உரிமை முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் பாகிஸ்தானில் உள்ள மதரீதியிலான துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வை உலகம் அறியச் செய்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தால் வடகிழக்கு மாநிலங்களின் கலாச்சாரம், பண்பாடு, மக்கள் தொகை ஆகியவற்றில் எந்த பாதிப்பும் ஏற்படாது. 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய இளைஞர்களிடையே ஏமாற்றம் நிலவியது. தற்போது அந்த நிலை மாறியுள்ளது. இந்தியாவில் மட்டும் அல்ல, இந்த உலகமே இந்திய இளைஞர்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறது. அவர்கள் சவால்களுக்கு சவால் விடுக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார். எதிர்ப்பு குரலை அடக்க முடியாது: பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கொல்கத்தாவில் நடைபெறும் தொடர் போராட்டத்தை  வரவேற்று டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ‘எதிர்ப்பு குரல்களை அடக்க முடியும் என பிரதமர் நினைக்கிறார். அவரால் முடியாது. இளைஞர்கள் நாட்டை முன்நோக்கி வழிநடத்துவர்’ என கூறியுள்ளார்.

‘அரசியலுக்கு அப்பாற்பட்டது’
ராமகிருஷ்ண மடத்தை விட்டு பிரதமர் மோடி வெளியேறிய பின் அதன் பொது செயலாளர் சுவாமி சுவிரானந்தா அளித்த பேட்டியில், ‘‘ராமகிருஷ்ண மடம் அரசியல் அல்லாத அமைப்பு. எங்களைப் பொறுத்தவரை நரேந்திர மோடி நாட்டின் தலைவர். மம்தா பானர்ஜி மேற்கு வங்க தலைவர். எங்கள் அமைப்பில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவர்கள் மதத்தைச் சேர்ந்த துறவிகள் உள்ளனர்,’’ என்றார்.

போராட்டம் தொடர்ந்தது
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் மாணவர்கள் அணியினர் மற்றும் மார்க்சிஸ்ட் கட்யினர் கொல்கத்தாவின் பல இடங்களில் நடத்திய போராட்டம் நேற்றும் 2வது நாளாக தொடர்ந்தது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

கொல்கத்தா துறைமுக கழகத்துக்கு சியாம பிரசாத் முகர்ஜி பெயர்
கொல்கத்தா துறைமுக கழகத்தின் 150வது நிறைவு விழாவை முன்னிட்டு அதன் பெயர் சியாம பிரசாத் முகர்ஜி துறைமுக கழகம் என பெயர் மாற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘‘நாட்டின் கடற்கரைகள் எல்லாம், வளர்ச்சிக்கான நுழைவு வாயில்கள். நீர்வழித் தடங்கள் மேம்பாடு, கொல்கத்தா துறைமுக கழகத்தின் தொடர்பை வளர்ச்சியடைச் செய்துள்ளது. மேற்கு வங்க அரசு அனுமதி அளித்ததும், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத், பிரதமரின் கிஷான் சம்மன் நிதி ஆகிய திட்டங்களின் பயன்கள் மேற்கு வங்க மக்களுக்கு கிடைக்கும்,’’ என்றார்.

Tags : government ,Mahatma Gandhi ,victims ,Modi , Citizenship, Mahatma Gandhi's will
× RELATED தமுக்கம் மைதானத்தை மூடியதால் காந்தி...