×

ஆன்லைனில் விளம்பரத்தை பார்த்து கார் வாடகைக்கு எடுத்து மோசடி: 2 பேருக்கு வலை

ஆவடி: ஆன்லைனில் விளம்பரத்தை பார்த்து, ஆவடி அருகே காரை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர். ஆவடி அடுத்த முத்தாபுதுபேட்டை, சபி நகரைச் சேர்ந்தவர் முத்துராணி (26). அதே பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தன்னிடம் உள்ள காரை வாடகைக்கு விடுவதற்காக, ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்து இருந்தார். அதனை பார்த்து சென்னை, அயனாவரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் முத்துராணியை நேரில் பார்த்து அறிமுகம் செய்துள்ளார்.

பின்னர், அவர் முத்துராணியிடம் நாள் வாடகையாக ரூ.1,500 தருவதாக கூறி காரை எடுத்து சென்றார். ஆனால், அதன்பிறகு அவர் கூறிய படி காருக்கு வாடகை பணத்தை தராமல் இழுத்து அடித்து வந்துள்ளார். மேலும், முத்துராணி, தனது காரை திரும்ப ஒப்படைக்குமாறு மணிகண்டனிடம் கேட்டுள்ளார்.

ஆனால், அவர் வாடகையும் தராமல், காரை ஒப்படைக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதோடு மட்டுமல்லாமல், முத்துராணி காரை இராமநாதபுரத்தை சேர்ந்த முகமதுஅலி என்பருக்கு ரூ.1.5 லட்சத்துக்கு அடமானம் வைத்து இருப்பது தெரியவந்தது. இது குறித்து முத்துராணி முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போலீசார் மோசடி செய்த மணிகண்டன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது நண்பரான பொன்னேரியை சேர்ந்த கிருபாகரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags : Online, advertising, looking, car rental, fraud, 2 people web
× RELATED குண்டாஸ் முடிந்து வெளியே வந்த ஒரு...