×

ஜல்லிக்கட்டில் உயிர் இழப்பை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் முன்னேற்பாடுகள்: அதிகாரிகள் தகவல்

சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழப்புகளை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி 2017ம் ஆண்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் விதிகளுக்குட்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டங்களின் கலெக்டர்களிடமிருந்து சுகாதாரத்துறைக்கு மருத்துவக்குழு அனுப்பி வைக்குமாறு, வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன்படி பொது சுகாதாரத்துறை அதிகாரிகள், உள்ளாட்சித்துறை அதிகாரிகளுடன் இணைந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களை முதல்கட்டமாக ஆய்வு செய்தனர். அங்கு தண்ணீர் சப்ளை, கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா என ஆய்வுசெய்தனர். அதிநவீன உயிர்காக்கும் உபகரணங்கள் அடங்கிய 108 ஆம்புலன்ஸ் ஒன்று தயார் நிலையில் வைக்கப்படும்.

இதுதவிர ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் இடத்திற்கு அருகிலிருக்கும் மருத்துவக்கல்லூரியில் இருந்து ஒரு சிறப்பு மருத்துவர், மருத்துவ பணியாளர் குழு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதுதவிர சிறிய அளவில் காயமடைபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஜல்லிகட்டு நடைபெறும் ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து மருத்துவக்குழுவும் அங்கு இருப்பார்கள். அதிநவீன உயிர்காக்கும் ஆம்புலன்ஸ், சிறப்பு மருத்துவக்குழு, ஆரம்ப சுகதார நிலைய மருத்துவ குழுவினர் என 3 விதமான மருத்துவ சிகிச்சைக்கு தயார் நிலையில் இருப்பார்கள். இதுதவிர ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், மாடுகளின் எண்ணிக்கையை பொறுத்து மருத்துவக்குழுவினரின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளோம். இதன்மூலம் உயிரிழப்பு தவிர்க்கப்படும். இவ்வாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

Tags : Health Department ,Jallikkad Health Department , Jallikattu, Health Department, Improvements, Officials
× RELATED அரசு மருத்துவமனைகளில் ஓஆர்எஸ் கரைசல்...