×

கோயில்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: பக்தர்களுக்கு அறநிலையத்துறை அறிவுரை

சென்னை: எளிதில் தீப்பற்ற கூடிய பிளாஸ்டிக் பொருட்களை கோயில்களுக்குள் எடுத்து வர பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 44 ஆயிரத்து 121 கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதான கோயில்கள் அடக்கம். இக்கோயில்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் கொண்டு வந்தால் மரத்தால் ஆன கூடைகளை வழங்கி வந்தனர். இந்த திட்டம் சில காலம் மட்டுமே நடைமுறையில் இருந்தது. இதனால், பக்தர்கள் தொடர்ந்து கோயில்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் யாரும் எதிர்பாராத வகையில் கடந்த ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த கடைகளில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

இதை தொடர்ந்து, கோயில்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இருப்பினும், பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக கட்டுபடுத்த முடிவில்லை. எனவே, கோயிலுக்குள் பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என்று பேனர்கள் வைக்கும் படி அறநிலையத்துறை ஆணையர் க.பணீந்திர ரெட்டி கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதில், தமிழகம் முழுவதும் அனைத்து கோயில்களிலும் எளிதில் தீ பிடிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பக்தர்கள் கோயிலுக்குள் எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும் என்று கோயில் வளாகத்தை சுற்றி பேனர்கள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அதில் கூறியிருந்தார். அதன்பேரில் கோயில்களில் அறிவிப்பு பலகை வைக்கும் பணியில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. மேலும், தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்பு காரணம் காட்டி கோயில்களில் புகைப்படம், வீடியோ எடுக்கவும் தடை உத்தரவு போடப்பட்ட நிலையில், அது தொடர்பாகவும் கோயில் நிர்வாகம் சார்பில் அந்தந்த கோயில்களில் பேனர் வைக்கவும் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி கூறுகையில், ‘கோயில்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் போது தீ பற்றும்  அபாயம் உள்ளது. எனவே, இவற்றினை தவிர்க்குமாறு பக்தர்களை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். ஒரு சிலர் அறிவுறுத்தலை பொருட்படுத்துவதில்லை. எனவே, தான் பக்தர்களின் கண்களின் படும்படி பேனர் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.


Tags : pilgrims ,temples , In temples, plastic, ban, devotees, charitable department
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு