×

உயர்நீதிமன்ற உத்தரவால் தமிழகத்தில் 92 இன்ஜினியரிங் கல்லூரிகள் மூட வாய்ப்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் தமிழகத்தில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் 92 இன்ஜினியரிங் கல்லூரிகள் மூடப்படலாம் என்று கூறப்படுகிறது. தூத்துக்குடி இன்பன்ட் ஜீசஸ் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் சார்பில் தொடரப்பட்ட ரிட் மனுவில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த மாதம் 20ம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், ‘‘சென்னை ஐஐடி, பெங்களூரு ஐஐஎஸ்சி, என்ஐடி திருச்சி பேராசிரியர்கள் அடங்கிய குழுவினரின் பரிந்துரை அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகம் தமிழகம் முழுவதும் 92 இன்ஜினியரிங் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் குறைபாடு காரணமாக 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை மாணவர் சேர்க்கையை குறைத்துள்ளது. ஏஐசிடிஇ அங்கீகாரம் வழங்கிய இடங்களை குறைப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு  எந்த அதிகாரமும் இல்லை.

அண்ணா பல்கலைக்கழகம் விதிகள் இருக்கும்பட்சத்தில் இணைவு அங்கீகாரத்தை ரத்து செய்யலாம். இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் இந்த உத்தரவு குறித்து உரிய காலஅவகாசத்துக்குள், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக இன்ஜினியரிங் கவுன்சலிங் தொடங்குவற்கு முன்பாக ஏஐசிடிஇ முடிவு எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள்,’போதுமான உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வக வசதி, போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் இணைவு அங்கிகாரத்தை ரத்து செய்யலாம்’ என்றனர்.  இந்நிலையில், ஆசிரியர் விடுமுறை எடுத்துள்ளதை கூட, ஒரு குறையாக அதிகாரிகள் குழுவினர் கருதுகின்றனர். சரி செய்யக்கூடிய நிலையில் உள்ள சிறு சிறு குறைகளை கூட பெரிய விஷயமாக கருத்தில் கொண்டு, கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஏஐசிடிஇக்கு பரிந்துரைக்கிறது என்று தனியார் கல்லூரிகள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். மேற்கண்ட உத்தரவால் வரும் கல்வியாண்டில் 100 கல்லூரிகள் வரை இணைவு அங்கீகாரத்ைத நிறுத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : engineering colleges ,Tamil Nadu 92 Engineering ,Tamil Nadu ,colleges ,Supreme Court , 92 Engineering, Tamil Nadu , Supreme Court ,colleges
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...