×

முசிறி அருகே அய்யாற்றில் இருந்து திருத்தியமலை ஏரிக்கு பாசன வாய்க்கால் அமைக்கப்படுமா?... நீண்டநாள் கோரிக்கை நிறைவேற விவசாயிகள் எதிர்பார்ப்பு

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா திருத்தியமலை ஊராட்சியில் சுமார் 160 ஏக்கர் பரப்பளவில் பாசன ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு அப்பகுதி வழியாக செல்லும் புங்கன் வாரி வாய்க்காலில் இருந்து மழை வெள்ள காலங்களில் தண்ணீர் வருவது உண்டு. தற்போது இப்பகுதி மக்களின் கோரிக்கை அய்யாற்றில் இருந்து புங்கன் வாரி வரத்து வாய்க்காலுக்கு கிளை வாய்க்கால் அமைக்க வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாகும். 160 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள திருத்தியமலை ஏரிக்கு தண்ணீர் வந்து நிரம்பினால் நேரடி பாசனமாக 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுவதோடு மறைமுகமாக 2ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இப்பகுதி மக்களின் விவசாய கனவு நினைவாக வேண்டும் என்றால் அய்யாற்று வாய்க்காலில் இருந்து புங்கன் வாரி வாய்க்காலுக்கு கிளை வாய்க்கால் அமைக்க வேண்டும்.

இத்திட்டத்திற்காக திமுக ஆட்சி காலத்தில் 89.64 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் வெளியிடப்பட்டது. அப்போது தேர்தல் நேரம் வந்ததால் மேற்கொண்டு திட்டம் செயல்படாமல் போனது. பின்னர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அதிமுக ஆட்சியில் மறுதிட்ட மதிப்பீடு செய்யப்பட்டு 2 கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்த இருந்த நிலையில், அரசியல் சூழல் மற்றும் பல்வேறு காரணங்களால் திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. பலவருட கனவு கானல் நீராய் போனதால் நொந்து போன இப்பகுதி விவசாயிகள், இளைஞர்கள் திட்டத்தை நிறைவேற்ற களமிறங்கியுள்ளனர். இதுகுறித்து திருத்தியமலை கிராமத்தை சேர்ந்த பாண்டியன் கூறும்போது திருத்தியமலை ஏரி கால்வாய் திட்டத்தை நிறைவேற்றி எங்கள் பகுதியை பசுமை பூமியாக மாற்ற திருத்தியமலை ஏரி பாசன விவசாயிகள் சங்கம் என்பதை தொடங்கியுள்ளோம். இதில் பெருமளவு இளைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இச்சங்கம் மூலம் புங்கன் வாரி வரத்து வாய்க்காலுக்கு அய்யாற்றில் இருந்து கிளை வாய்க்கால் அமைப்பதற்கு அரசிடம் வலியுறுத்துவதோடு நீர் ஆதார நிலைகளை மீட்டெடுக்கவும் மரக்கன்றுகள், பணை விதைகள் நடுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம். சுக்காம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தண்டலை பகுதியில் வரும் அய்யாற்று வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்கால் 2.3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புங்கன் வாரி வரத்து வாய்க்காலுடன் இணைத்தால் திருத்தியமலை ஏரிக்கு மழை, வெள்ள காலங்களில் தண்ணீர் வந்து நிறையும். அவ்வாறு நிறையும்போது 60 ஏக்கரில் உள்ள கோமங்கலம் ஏரி, 180 ஏக்கர் பரப்பளவில் உள்ள சித்தாம்பூர் ஏரி ஆகியவையும் நிரம்பும். இதனால் பல ஆயிரக்கணக்கான விவசாயி நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறுவதால் ஏழை விவசாயிகளின் வாழ்வு வளம் பெறும். இதுதவிர நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு, பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடும் நீங்கும்.

புதூர்ப்பட்டியை சேர்ந்த விவசாயி பிரபு கூறும்போது : புதூர்பட்டி பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. இப்பகுதியில் பெரும்பாலும் சோளம், கடலை, கம்பு, துவரை உள்ளிட்ட மானாவாரி பயிர்களை மட்டுமே விவசாயிகள் பெரும்பாலும் சாகுபடி செய்து வருகின்றனர். திருத்தியமலை ஏரிக்கு அய்யாறு கால்வாய் திட்டத்தை செயல்படுத்தினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு எங்கள் பகுதி விவசாயிகள் பெரிதும் பயன்பெற வாய்ப்பு உள்ளது. திருத்தியமலை ஏரியில் உள்ள சீமை கருவேல முள் மரங்களை அகற்றும் பணி முசிறி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் மூலம் நடைபெற்றது. தூர் வார வேண்டும் என்றால் அதற்குரிய நிதி ஒன்றிய நிர்வாகத்திடம் இல்லை என கூறப்படுகிறது. எனவே திருச்சி மாவட்ட ஆட்சியர் தமிழக அரசிடம் சிறப்பு நிதி பெற்று திருத்தியமலை ஏரியை தூர் வாரி ஆழப்படுத்துவதோடு கரைகளை பலப்படுத்த வேண்டும்.

மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ மனது வைத்தால் இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற முடியும், மேலும் துறையூர் அரியாறு வடிகால் கோட்ட அலுவலர்களும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த முனைப்புடன் முயற்சி எடுத்தால் அய்யாறு தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்க்க முடியும். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு கூறும்போது: மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் வழியாக திருச்சி மாவட்டம் முக்கொம்பு பகுதிக்கு வந்து சேர்கிறது. ஆனால் மேட்டூரில் இருந்து குஞ்சாண்டியூர் வழியாக இடைப்பாடி, சிறுமலை சமுத்திரம், நாமக்கல், சேந்தமங்கலம் அருகே உள்ள கொல்லிமலையின் அடிவாரத்தில் அய்யாற்று வரை வாய்க்கால் வெட்டி தண்ணீரை கொண்டு வருவதன் மூலம் கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை சேமிக்கலாம்.

அதே வேளை அய்யாற்றில் இருந்து கிளை வாய்க்கால்கள் மூலம் பாசன ஏரிக்கு தண்ணீரை கொண்டு செல்ல வேண்டும். அதனடிப்படையில் அய்யாற்றில் இருந்து திருத்தியமலை ஏரிக்கு பிரதான வாய்க்காலாக உள்ள புங்கன் வாரி வரத்து வாய்க்காலுக்கு தண்டலையில் இருந்து கிளை வாய்க்கால் வெட்டி இணைப்பு ஏற்படுத்த வேண்டும். இதனால் மழை வெள்ள காலங்களில் புங்கன் வாரி வரத்து வாய்க்காலில் வரும் வழக்கமான தண்ணீர் திருத்தியமலை ஏரிக்கு கிடைக்கும் கூடுதலாக அய்யாற்று வாய்க்காலில் இருந்து புங்கன் வாரி வரத்து வாய்க்காலுக்கு கிளை வாய்க்கால் அமைப்பதன் மூலம் வீணாகும் மழை வெள்ள நீரும் திருத்தியமலை ஏரியை வந்தடையும். இதனால் விவசாயிகளின் வாழ்வு மலரும். ஏழை விவசாயிகளின் குடும்பத்தின் நிலை உயர வேண்டுமானால் தமிழக அரசு திருத்தியலை ஏரிக்கான வாய்க்கால் பாசன திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ பரமேஸ்வரியிடம் கேட்ட போது, திருத்தியமலை பகுதிக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. திருத்தியமலை ஏரி பாசன வாய்க்கால் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என முதல்வாpடம் கோரிக்கை வைத்துள்ளேன். சட்டசபையிலும் இது தொடர்பாக வலியுறுத்தி பேசியுள்ளேன். மேலும் முதல்வரிடம் இத்திட்டதை விரைந்து நிறைவேற்றி தருமாறு கோரிக்கை மனு அளிக்க இருக்கிறேன் என்றார்.

அரசுக்கு கோரிக்கை
நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவனின் வாக்குக்கு ஏற்ப திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா திருத்தியமலை கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுவதற்காக இளைஞர்கள், முதியோர், பொதுமக்கள் தங்கள் கிராமத்து ஏரிக்கு கிளை வாய்க்கால் கொண்டு வருவதற்கு பெரு முயற்சி எடுத்து வருவதுடன், இத்திட்டத்தை தமிழக அரசு அப்பகுதியை சேர்ந்த கிராமங்கள் சேர்ந்து அரசுக்கு கோரிக்கை வைக்கிறது.

அய்யாறு பெயர் காரணம்
ஐயாறு என்பது ஐந்து ஆறுகள் ஒன்றாக கலந்து வருவதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த ஐயாற்றில் அரோச்சி ஆறு, காணப்பாடி மூலை ஆறு, மாசி மலை அருவி, நக்காட்டு ஆறு, தாழிகை ஆறு ஆகிய ஐந்து ஆறுகளும் கொல்லிமலையில் உள்ள சித்தன் குட்டு உச்சியில் இருந்து புறப்படுகிறது. கொல்லிமலையின் பல இடங்களில் இருந்து வரும் இந்த ஆறுகள் அரப்பளீசுவரர் கோயிலின் அருகே சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இருந்து ஆகாச கங்கை என்ற பெயருடன் ஆர்பரிப்புடன் கீழே விழுந்து அடிவாரத்தில் புளியஞ்சோலையில் நாட்டாமடுவு வழியாக ஐய்யாறாக புறப்பட்டு வருகிறது. ஐயாறு என்ற பெயர் நாளடைவில் மருகி அய்யாறு என்று அழைக்கப்படுகிறது. அய்யாறு புளியஞ்சோலை, எரகுடி, பேரூர், வேளகாநத்தம், தண்டலைப்புத்தூர், தண்டலை, திண்ணக்கோணம், நெய்வேலி, கோமங்கலம், சித்தாம்பூர், வழியாக வந்து முக்கொம்பு என்ற இடத்தில் காவிரியுடன் கலந்து கடலுக்கு செல்கிறது.

Tags : Ayyadar ,Musiri ,lake ,Tirthiyamalai ,Thiruthiramalai , Musiri, Thiruthimalai lake, irrigation canal
× RELATED சாலப்பட்டியில் இடமாற்றம் செய்யப்பட்ட ரேஷன் கடை திறப்பு