×

ரசாயன உரங்களால் நீரில் கலக்கும் கழிவுகள்: கரையோர விவசாயத்தால் மாசுபடுகிறதா மேட்டூர் காவிரி?

* உடனடி நடவடிக்கை அவசியம்
* எதிர்கால அபாயங்கள் ஏராளம்

மேட்டூர்: தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களுக்கு  தண்ணீர் தரும் மேட்டூர்  அணைப் பகுதிகள், காவிரி கரையோர விவசாயத்தால் மாசுபட்டு வருவதாக அச்சம் எழுந்துள்ளது. மேட்டூர் அணை கட்டபட்டபோது நீர் தேக்க பகுதிகளாக அளவீடு செய்யப்பட்ட 130 சதுர கிமீ பரப்பளவில் இருந்த நூற்று கணக்கான கிராமங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. அந்த கிராம மக்கள்  காவிரியின் இரு கரைகளிலும் மேடான பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். அப்போது தங்களின் விளை நிலங்கள், வழிபாட்டுத்தலங்களை அப்படியே விட்டு கிராம மக்கள் வெளியேறினர். மேட்டூர் அணை நிரம்பினால் மேட்டூரிலிருந்து ஓகேனக்கல் வரை தண்ணீர்,  கடல்போல காட்சியளிக்கும். அணையின் நீர் மட்டம் சரிந்து வரும்போது காவிரியின் இரு கரைகளிலும் சேலம், தருமபுரி மாவட்ட மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். ஒருமுறை தண்ணீர் வற்றினால் மீண்டும் பருவமழை பெய்து அணைக்கு தண்ணீர் வருவதற்குள் முப்போக சாகுபடி செய்து வருகின்றனர். இதனால் இரண்டு ஆண்டுகள் வரை,  தங்களின் உணவுத்தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதுடன் கால்நடைகளுக்கு  தேவையான தீவனங்களையும் சேமித்து வைத்துக் கொள்கின்றனர்.  

மேட்டூர் நீர் தேக்கத்தில் 2 ஆயிரம் மீனவர்களும், 2,000 மீனவர் உதவியாளர்களும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 ஆயிரத்திற்கு அதிகமானோர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். மீனவர்கள் காவிரியின் இரு கரைகளிலும் முகாம்கள் அமைத்து மீன் பிடித்தொழில் செய்து வருகின்றனர். மேட்டூர் நீர் தேக்கத்திலிருந்து  ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டம், சேலம் மாநகராட்சி கூட்டு குடிநீர் திட்டம், ஆத்தூர் கூட்டு குடிநீர் திட்டம், வேலூர் கூட்டுகுடிநீர் திட்டம், மேட்டூர் நகராட்சி தனிகுடிநீர் திட்டம், கோனூர் கூட்டுகுடிநீர் திட்டம் உள்ளிட்ட பலவகையான கூட்டு குடிநீர் திட்டங்களுக்கும் மேட்டூர் காவிரியிலிருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.
 தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு, மேட்டூர் நீர் தேக்கத்திலிருந்து  ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்ட காலமும் உண்டு. மேட்டூர் அணை பாசனம் மூலம், சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர் உட்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இவ்வளவு சிறப்பு மிக்க மேட்டூரில் காவிரி மாசடைந்து வருவதால் சமூக ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர்.

தற்போது அணையின் இடது கரையில் உள்ள உபரிநீர் போக்கியான 16கண் பாலம் பகுதியில் பச்சை நிறத்தில் படலங்கள் படிந்து துர்நாற்றம் வீசுகிறது. காவிரி கரையின் சேலம், தருமபுரி மாவட்ட பகுதிகளில் பச்சை நிற படலங்கள் படிந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் அவதிக்குள்ளாகி பல இடங்களில் போராட்டங்களும் வெடித்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இப்பிரச்னை இருந்தாலும், நடப்பு ஆண்டில் மிக அதிக அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் சுதாரித்துகொண்ட சேலம் மாவட்ட நிர்வாகம் பொதுப்பணித்துறை, வேளாண்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் நீர் மாதிரிகளை எடுத்துச்சென்று, பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டதில் தண்ணீரில் பாஸ்பேட், நைட்ரேட் போன்றவை அதிக அளவில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 37,720 ஏக்கர் பரப்பளவு உள்ள மேட்டூர் நீர்தேக்கப் பகுதியில் அணையின் நீர்மட்டம் சரியும் போது 50 சதவிகித நிலப்பரப்பிற்கு மேல் விவசாயம் செய்யப்படுகிறது.

அப்போது பயிர்களுக்கு இடப்படும் ரசாயன உரங்கள், மண்ணில் தேங்கி நீரில் கலப்பதும் தெரியவந்துள்ளது. இந்த ரசாயன உரங்களால் ஏற்படும் வேதியியல் மாற்றம் காரணமாக, மேட்டூரில் காவிரி மாசடைந்து வருகிறது என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த மாற்றம் காரணமாக தண்ணீர் நிறம் மாறும். சுவாசிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசும். கரையோர கிராம மக்கள் வசிக்க முடியாத நிலை உருவாகும். அதோடு காவிரி நீர் மாசடைய காரணமான பூஞ்சை அதிக அளவில் உருவாகும்போது, மீன்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு  அழிந்து போகும்.  குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலை உருவாகும். எனவே, காவிரியை காப்பாற்ற உடனடி நடவடிக்கைகள் அவசியம்   என்கின்றனர் நீர்வள ஆர்வலர்கள்.

உரிய ஆலோசனை நடத்தி நடவடிக்கை   
பொதுப்பணித்துறை உறுதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘மேட்டூர் அணையின் நீர் தேக்கப்பரப்பில் விவசாயத்தில் ஈடுபடுவோர், அதிக அளவில் ரசாயன  உரங்களை பயன்படுத்துகின்றனர். இதனால் பாஸ்பேட், நைட்ரேட் ஆகியவை அதிக அளவில் நீரில் கலந்து மாசு ஏற்படுகிறது. தற்போது உடனடி நடவடிக்கையாக ரசாயன கலப்பு இல்லாத நுண்ணுயிர் கலவையை  தொடர்ந்து தெளித்து வருகிறோம். இதனால் பூஞ்சை கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இதுபற்றி தொடர்ந்து ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றனர்.

பல்வேறு உயிர்களுக்கு கடும் பாதிப்புகள் ஏற்படும் - நீர்வள ஆர்வலர் எச்சரிக்கை
நீர்வள ஆர்வலரும், வீரக்கல் புதூர் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலருமான பாரதி கூறுகையில், ‘‘நீண்ட நாட்களாக இப்பிரச்னை இருந்து வருகிறது. நடப்பு ஆண்டில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. புனித நதியாக கருதப்படும் காவிரி மாசடைய கூடாது. மேட்டூரில் காவிரி மாசடைவதால் மீன்கள் இறப்பதோடு, மனித உயிர்களுக்கும் காவிரி கரையில் காவிரி நீரை பருகும் வனவிலங்குகள், கால்நடைகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே  நீர்வளம், நிலவளம், மீன்வளத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் எதிர்காலத்தில் காவிரி நீரை பருக முடியாத நிலை உருவாகும்,’’ என்றார்.

ஆய்வில் அதிக மாசு இருப்பது கண்டுபிடிப்பு - விவசாய ஆர்வலர் அதிர்ச்சி
நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவரும், விவசாய சங்க பிரதிநிதியுமான பழ.ஜீவானந்தம் கூறுகையில், ‘‘தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், மேட்டூரில் அதிகான மாசு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாசடைந்த நகரங்களில் மூன்றாவது நகரம் மேட்டூர் என ஆய்வறிக்கை கூறுகிறது. தற்போது காவிரியும் மாசடைந்து வருவது கவலையளிக்கிறது. சில நூறுபேர் வாழ்வதற்காக, காவிரி மாசடைவதை ஏற்கமுடியாது. காவிரி நீர் பலலட்சம் மக்களுக்கு குடிநீராக பயன்படுகிறது. அதுவுமின்றி டெல்டா பகுதியின் உயிர்நாடியாக விளங்குகிறது. எனவே தமிழக அரசும், பொதுப்பணித்துறையும் மாசிலிருந்து காவிரியை காக்க  போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும்,’’ என்றார்.

நோய் பாதிப்புகளால் தொடர்ந்து மக்கள் அவதி - சமூக ஆர்வலர் வேதனை
நீர்சமூக ஆர்வலர் தங்கவேலு கூறுகையில், ‘‘மாசுக்களால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க, பொதுமக்கள் பல போராட்டங்களை நடத்தியும் பலனில்லை. சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் மேட்டூரில் கடுமையான துர்நாற்றம் வீசுவதை ஏற்கமுடியாது. துர்நாற்றத்தை போக்க  நிரந்தர நடவடிக்கை தேவை. விவசாயிகள் பயன்படுத்தும் ரசாயன உரங்களால் பாதிப்பு என்றால், இயற்கை முறையில் விவசாயம் செய்ய அனுமதிக்கலாம்,’’ என்றார்.


Tags : Chemical Fertilizer, Waste, Mettur Cauvery
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை