×

நாகர்கோவில் மாநகராட்சியில் தொடரும் அவலம் முடிவுக்கு வராத பாதாள சாக்கடை திட்டம்: போக்குவரத்து நெரிசல், சேறு, புழுதியால் மக்கள் அவதி

நாகர்கோவில்: நாகர்கோவில் நகராட்சியாக இருந்தபோது மக்கள் தொகை அதிகரிப்பையொட்டி பாதாளசாக்கடை கட்டாய தேவை என்ற நிலைப்பாட்டில் ரூ.76.4 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை பணி கடந்த மார்ச் 2013ம் ஆண்டு தொடங்கியது. மொத்தம் 52 வார்டுகள் நாகர்கோவில்,
நாகர்கோவில் நகராட்சியாக இருந்தபோது மக்கள் தொகை அதிகரிப்பையொட்டி ரூ.76.4 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை பணி கடந்த மார்ச் 2013ம் ஆண்டு தொடங்கியது. மொத்தம் 52 வார்டுகள் உள்ள நாகர்கோவில் நகராட்சியில் 18 வார்டுகள் முழுவதும், 17 வார்டுகளில் பகுதியாகவும் பாதாளசாக்கடை பணிகள் தொடங்கியது. இந்த பணிகளை குடிநீர் வடிகால் வாரியம் செயல்படுத்தி வருகிறது. மொத்தம் 118.86 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்க தொடங்கிய பணி 102.76 கிலோ மீட்டருக்கு முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் நடந்து வருகிறது. இதில் சுமார் 16 கிலோ மீட்டர் அளவிற்கு பணிகள் சிக்கலான பகுதியாக உள்ளது. குறிப்பாக குறுகலான தெருக்களில் கழிவுநீரோடைகள் செல்லும் பகுதிகள் உள்ளன. அந்த பகுதியில் பணிகள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பணி தொடங்கி 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் முடியவில்லை. நீதிமன்ற வழக்கு, நெடுஞ்சாலைதுறை அனுமதி என சில இடர்பாடுகளால் பாதாளசாக்கடை பணி முடிவடைய காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

பாதாளசாக்கடை பணி தொடங்கிய 2 ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட்டிருந்தால் ரூ.52 கோடியை மத்திய அரசு வழங்கி இருக்கும். ஆனால் காலம் கடந்ததால் மத்திய அரசு வழங்கவேண்டிய ரூ.52 கோடியை மாநில அரசு வழங்கியுள்ளது. நாகர்கோவில் நகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாதாளசாக்கடை வழியாக வரும் கழிவுகள் வடிவீஸ்வரம் பறக்கிங்கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் நீரேற்று நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து வலம்புரிவிளை உரக்கிடங்கு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு கழிவுகள் உரமாகவும், நீர் விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.தினமும் 175 லட்சம் லிட்டர் தண்ணீர் இந்த சுத்திகரிப்பு நிலையம் மூலம் பிரிக்கும் வகையில் 2 பிரமாண்டமான பிளாண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சுத்திகரிப்பு நிலையம் ரூ.17 கோடியிலும், பறக்கின்கால் பகுதில் அமைக்கப்பட்டுள்ள கழிநீரேற்று நிலையம் ரூ.6 கோடியிலும் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சுமார் 16 கிலோ மீட்டருக்கு பாதாளசாக்கடை பணி நடக்கவேண்டியுள்ளது. கலெக்டர் அலுவலகம் முன்புள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணி செய்யவேண்டியுள்ளது. இதற்கு மாநகராட்சி ரூ.1 கோடியே 57 லட்சம் பணத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு வழங்கவேண்டும். அப்போதுதான் தேசிய நெடுஞ்சாலையில் வேலை செய்யமுடியும். ஆனால் மாநகராட்சி பணம் கொடுக்காமல் இழுத்தடிப்பதால் இந்த பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுபோல் கழிவுநீரோடைகள் செல்லும் குறுகலான தெருக்களிலும் பணி செய்யவேண்டியுள்ளது. இதனை மாநகராட்சி சரிசெய்து கொடுக்காமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் நாகர்கோவில் சற்குணவீதியில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு தெருக்களில் குழாய் பதிக்கப்படவுள்ளது. இதில் குழாய்கள் அமைக்கப்படவுள்ள தெருக்கள் அனைத்தும் தனியார் நிலம் என கூறப்படுகிறது. இதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க பாதாளசாக்கடை பணிக்கு சாலையில் பள்ளம் தோண்ட காவல்துறை உரிய அனுமதி வழங்குவதில்லை என்றும் கூறப்படுகிறது. நாகர்கோவில் நகர பகுதியில் சாலைகள் அனைத்தும் குறுகலான பகுதிகள். இதில் பணி செய்யும்போது, மாற்றுபாதையில் போக்குவரத்தை இயக்கும்போது, போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் என கூறி காவல்துறை அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. பாதாளசாக்கடை பணியை வருகிற 3.2.2020க்குள் முடிக்க வேண்டும். பல தரப்பில் போதிய ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் பணி முடிவதில் மேலும் காலம் நீடிக்கும் என பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதனை மாநகராட்சி நிர்வாகம், குடிநீர்வடிகால் வாரியம் கருத்தில் கொண்டு பாதாளசாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரூ. 76 கோடியில் தொடங்கிய திட்டம் ரூ.110 கோடியில் நிற்கிறது :  கடந்த 2013ம் ஆண்டு ரூ.76.04 கோடியில் பாதாளசாக்கடை பணி தொடங்கியது. இந்த பணி 2 வருடத்தில் முடித்திருக்கவேண்டும்.  வழக்கு உள்ளிட்ட காரணத்தால் தாமதம் ஏற்பட்டதால் திட்டமதிப்பீடு உயர்ந்துள்ளது. 2 ஆண்டில் முடிக்கவேண்டிய திட்டப்பணி 7 வருடம் கடந்தும் முடிக்கப்படவில்லை. இதனால் திட்டமதிப்பீடு உயர்ந்து தற்போது ரூ.110.51 கோடியில் இந்த பணியை முடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாசுகட்டுப்பாட்டு வாரியம் எதிர்ப்பு : வலம்புரிவிள உரக்கிடங்கில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தினமும் 175 லட்சம் லிட்டர் தண்ணீர் விவசாயத்திற்கு வெளியேற்றப்படவுள்ளது. இந்த தண்ணீரை வட்டவிளை சானலில் விட முதலில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு மாசுகட்டுப்பாட்டு வாரியம் எதிர்ப்பு தெரிவித்தது. வட்டவிளை சானலில் விடாமல், வலம்புரிவிளை சுத்தரிப்பு நிலையத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தெங்கம்புதூர் சானலில்விட மாசுகட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக ரூ.9 கோடியில் வலம்புரிவிளை சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தெங்கம்புதூர் சானல் வரை குழாய் பதிக்கப்படவுள்ளது. இந்த பணியும் பாதாளசாக்கடை திட்ட மதிப்பீட்டில் இருந்துதான் நடக்கவுள்ளது.

வளர்ச்சி பணிகளில் மெத்தனம்
இது குறித்து சமூக ஆர்வலர் அந்தோணியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பாதாளசாக்கடை பணி நடந்து வருகிறது. பாதாளசாக்கடை பணி முடிந்த பகுதிகளில் கூட சாலைகள் போடாததால் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் மழைகாலங்களில் சகதிகாடாக உள்ளது. வெயில் காலங்களில் புழுதி வீசுகிறது. பாதாளசாக்கடை பணி முடிந்த பகுதிகளில் சாலைகள் போட கோரிக்கை விடுத்தும், சாலையை சீரமைக்காமல் மாநகராட்சி காலம் கடத்தி வருகிறது. இதே போல் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் மிகவும் மோசமாக உள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் வீட்டுவரி, குடிநீர் வரி, சொத்துவரி உள்ளிட்ட வரி வசூலிப்பதில் மட்டுமே குறியாக உள்ளது. இதேபோல் ஆக்ரமிப்பு கட்டிடங்களை அகற்றும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த பணிகளில் தீவிரம் காட்டி வரும் மாநகராட்சி அதிகாரிகள், வளர்ச்சி பணிகளும் தீவிரகாட்ட வேண்டும். ஆனால் வளர்ச்சி பணியில் அவர்கள் மெத்தனபோக்கை கடைப்பிடித்து வருகின்றனர். வரிவகைகளை தீவிரமாக வசூல் செய்யும் அதிகாரிகள், சாலைகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். என்றார்

சுற்றுச்சுவரை உயர்த்த வேண்டும்
வலம்புரிவிளையில் அமைந்துள்ள சுத்திரிப்பு நிலையத்தை சுற்றி 2 மீட்டர் உயரத்திற்கு காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டுள்ளது. 2 மீட்டர் உயரத்திற்கு கட்டப்பட்ட காம்பவுண்ட் சுவரை 5 மீட்டர் உயரத்திற்கு கட்டவேண்டும் என பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது. இதனால் 5 மீட்டர் உயரத்திற்கு சுற்றுச்சுவர் கட்டப்படவுள்ளது. இதுபோல் சுத்திகரிப்பு நிலையம் அருகே மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) அமைக்கப்படவேண்டும். அமைப்பதற்கு ஏதுவாக மாநகராட்சி வலம்புரிவிளையில் உள்ள குப்பைகளை அகற்றி கொடுக்கவேண்டும். ஆனால் இதுவரை அகற்றிக்கொடுக்கப்படவில்லை. மேலும் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்வதற்கு ஏற்றவகையில் வழியில் உள்ள குப்பைகளையும் மாநகராட்சி அகற்றித்தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

போதிய நிதி வழங்காமல் இழுத்தடிப்பு
பாதாளசாக்கடை பணி சுமார் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. இதில் கலெக்டர் அலுவலகம் முன்புள்ள சாலையில் பாதாளசாக்கடைக்கு குழாய் பதிக்கவேண்டியுள்ளது. இதற்காக மாநகராட்சி ரூ.1 கோடியே 57 லட்சம் தேசிய நெடுஞ்சாலைக்கு வழங்கவேண்டும். இந்த நிதியை வழங்காததால் பணி செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சியில் போதி நிதி இருப்பு குறைவாக உள்ளது. தற்போது  புத்தன் அணை குடிநீர் திட்டத்திற்கு பணி நடந்து வருகிறது. இந்த திட்டத்தில்  ஒரு தொகையை மாநகராட்சி கட்டியுள்ளது. இதனால் சாலை பணிகள் உள்ளிட்ட பணிகள்  செய்வதில் போதிய நிதி இல்லாத காரணத்தால், முக்கியமான பணிகள் செய்யப்பட்டு  வருகிறது. என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : corridor ,Nagercoil Municipal ,Nagercoil Corporation , Unending sewage project , Nagercoil Corporation, traffic congestion, mud and dust
× RELATED கோவை, திருச்சியில் ரூ.3 ஆயிரம் கோடியில்...