×

பிரிட்டன் நாட்டின் தூதரை திடீரென கைது செய்தது ஈரான் அரசு: அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம்

டெஹ்ரான்: பிரிட்டன் நாட்டின் தூதரை ஈரான் அரசு திடீரென கைது செய்ததால் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரானின் ராணுவ தளபதி காஸ்சிம் சுலைமானியை அமெரிக்க ராணுவம் டிரோன் தாக்குதலில் கொன்றதற்கு பழி தீர்க்க, ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அந்த சமயத்தில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் நடுவானில் தீப்பிடித்து கீழே விழுந்து வெடித்து சிதறியது. அதில் பயணம் செய்த 176 பேரும் பலியாயினர். அவர்களில் பெரும்பாலானோர் ஈரான்-கனடா இரட்டை குடியுரிமை பெற்றவர்கள்.

மேலும் உக்ரைன், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, சுவீடன் நாட்டை சேர்ந்தவர்களும் இருந்தனர். ஈரான் ராணுவம்தான் உக்ரைன் விமானத்தை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியிருப்பதாக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட  மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக சில வீடியோக்களும் வெளியிடப்பட்டது. இந்த வீடியோக்கள் முழு ஆய்வுக்கு உட்படுத்தி நிரூபணமானவை என அமெரிக்காவின் நியூயார்க் டைம்சும் உறுதி செய்தது. ஆனாலும், ஈரான் ஒப்புக் கொள்ளவில்லை. ஏவுகணை தாக்குதலால் விமானம் சுடப்படவில்லை என்றே கூறி வந்தது.

மேலும், விமான விபத்து தொடர்பான விசாரணையில் பங்கேற்க அமெரிக்கா, உக்ரைன், கனடா உள்ளிட்ட நாடுகளுக்கும் அழைப்பு விடுத்தது. இந்த விஷயத்தில் ஈரானுக்கு சர்வதேச நெருக்கடிகள் அதிகரித்த நிலையில், வேறு வழியின்றி நேற்று தனது தவறை ஒப்புக் கொண்டது. விமானத்தை ஈரான் ராணுவம் சுட்டுவீழ்த்தியதை கண்டித்து ஈரானில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. உயர்மட்ட தலைவர் அயத்துல்லா காமேனி பதவி விலக வலியுறுத்தி இளைஞர்கள், மாணவர்கள் பலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே அமிர் கபிர் பல்கலைக்கழகம் அருகே பிரிட்டன் தூதர் ராப் மெக்கைரை ஈரான் பாதுகாப்புப் படையினர் சில மணிநேரம் தடுப்புக் காவலில் வைத்திருந்து பின்னர் விடுவித்தது தெரியவந்துள்ளது. போராட்டத்தை தூண்டிய குற்றச்சாட்டில் அவரை ஈரான் அரசு தடுப்புக்காவலில் வைத்தது. இது சர்வதேச விதிகளை மீறிய செயல் என பிரிட்டன் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரான் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என அமெரிக்காவும் வலியுறுத்தியுள்ளது.                                                                                


Tags : arrest ,US ,ambassador ,Britain ,Iran , British Ambassador, Arrested, Government of Iran
× RELATED டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்...