அரசு உத்தரவு பிறப்பித்தால் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம்: ராணுவ தளபதி பேட்டி

புதுடெல்லி: டெல்லியில் ராணுவ தளபதி ஜெனரல் நரவானே நேற்று அளித்த பேட்டி: எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி மிகவும் பரபரப்பாக உள்ளது. உளவுத் தகவல்கள் ஒவ்வொரு நாளும் பெறப்பட்டு, தீவிரமாக பரிசீலிக்கப்படுகின்றன. இந்த எச்சரிக்கை நடவடிக்கையால்தான், பாகிஸ்தான் படையினரின் செயல்பாடுகளை முறியடிக்க முடிகிறது. ஒட்டு மொத்த ஜம்மு காஷ்மீருமே இந்தியாவைச் சேர்ந்ததுதான் என நாடாளுமன்ற தீர்மானம் உள்ளது. நாடாளுமன்றம் விரும்பினால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் நமக்கு சொந்தமானதுதான்.

இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், தகுந்த நடவடிக்கை எடுப்போம். சீன எல்லையில் எந்தவித சவால்களையும் சந்திக்க ராணுவம் தயாராக இருக்கிறது. நவீன ஆயுதங்களை கொண்டு செல்வது உட்பட அனைத்து நடவடிக்கைக்கும் தயாராக இருக்கிறோம். முப்படை தலைமை தளபதி பதவி, ராணுவ விவகாரத்துறை ஆகியவை உருவாக்கப்பட்டது, முப்படைகளையும் ஒன்றிணைக்கும் மிகப் பெரிய நடவடிக்கை. இதன் வெற்றியை ராணுவம் உறுதி செய்யும். முப்படைகளை ஒன்றிணைப்பதில் கவனம் செலுத்தப்படும். ஒருங்கிணைப்பு என்பது தரைப்படையிலும் உள்ளது.

இதற்கு உதாரணம், ஒருங்கிணைந்த போர் குழு. தரைப்படையில் உள்ள அனைத்து பிரிவினரும் ஒன்றாக இணைந்து போர் நடவடிக்கையை மேற்கொள்கிறோம். அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து நாங்கள் செயல்படுவோம். நமது அரசியல் சாசனத்தில் நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவை அடங்கியுள்ளது. இவை நம்மை வழிநடத்த வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Pak ,Army Commander ,Occupied Kashmir ,Commander ,Army , Government, Pak. Occupied Kashmir, Army Commander
× RELATED ஜம்மு காஷ்மீர் மாநிலம்...