×

விமானம் தாங்கி போர்க்கப்பலில் வெற்றிகரமாக தரையிறங்கியது உள்நாட்டு தேஜஸ் போர் விமானம்

புதுடெல்லி: கடற்படை பயன்பாட்டுக்காக மாற்றியமைக்கப்பட்ட உள்நாட்டு தயாரிப்பு தேஜஸ் இலகு ரக போர் விமானம், ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர் கப்பலில் நேற்று வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. நமது நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இலகு ரக போர் விமானம் தேஜஸ். இது ஏற்கனவே விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதை கடற்படைக்காக விமானம் தாங்கி போர்க் கப்பலில் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கும் பணியில் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனமும் (டிஆர்டிஓ), ஏரோநாட்டிக்கல் மேம்பாட்டு மையம், இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தின் விமான ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு மையம் உட்பட பல நிறுவனங்கள் ஈடுபட்டன.

விமானம் தாங்கி கப்பல்களில் உள்ள சிறிய ஓடுதளத்துக்குள் விமானம் பறந்து, தரையிறக்கும் வகையில் பல மாற்றங்கள் தேஜஸ் விமானத்தில் செய்யப்பட்டன. கப்பலில் தரையிறங்கும்போது, விமானத்தின் பின்பகுதி வழியாக வெளியேறும் கொக்கி, ஓடுதளத்தில் உள்ள 3 இரும்புக் கம்பி வயர்களில் ஏதாவது ஒன்றில் சிக்கி, அதன் வேகம் குறைக்கப்பட்டு நிற்கும். அவ்வாறு கொக்கி, வயரில் சிக்கவில்லை என்றால், அந்த விமானம் மேலே பறந்து மீண்டும் தரையிறங்க முயற்சிக்கும்.
இத்தகைய மாற்றங்களுடன் வடிவமைக்கப்பட்ட தேஜஸ் விமானம், கோவா கடற்கரையில் அமைக்கப்பட்ட ஓடுபாதையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பல கட்ட சோதனைகளை முடித்தது.

இந்நிலையில் அரபிக்கடலில் நிற்கும் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர்க் கப்பலில், தேஜஸ் விமானத்தை தரையிறக்கும் முயற்சி நேற்று முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டது. நேற்று காலை 10.02 மணியளவில் விக்ரமாதித்யா கப்பலில், தேஜஸ் விமானம் வெற்றிகரமாக தரையிறங்கியது. முதல் முயற்சிலேயே, தேஜஸ் போர் விமானம், கப்பலில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதற்காக டிஆர்டிஓ மற்றும் கடற்படை அதிகாரிகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். ‘‘இந்திய போர் விமான வரலாற்றில் இது மிகப் பெரிய நிகழ்வு’’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விக்ரமாதித்யா போர் கப்பலில் ஏற்கனவே, ரஷ்ய தயாரிப்பு மிக்29கே ரக போர் விமானம் உள்ளது. தற்போது அதில் இணைய தேஜஸ் விமானமும் தயாராகிவிட்டது. இனி கடற்படை பயன்பாட்டுக்கு என பிரத்யேக தேஜஸ் விமானம் அதிகளவில் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Tejas , Battleship, Tejas fighter plane
× RELATED ராஜஸ்தானில் தேஜஸ் போர் விமானம் விழுந்து விபத்து