40 ஆண்டுக்கு மேல் ஆட்சி செய்த ஓமன் மன்னர் காபூஸ் மரணம்: உறவினர் புதிய ஆட்சியாளரானார்

மஸ்கட்: நாற்பது ஆண்டுக்கு மேல் ஓமன் நாட்டில் ஆட்சி செய்த மன்னர் காபூஸ் பின் சையத் உடல் நலக்குறைவால் காலமானார். அதைத்தொடர்ந்து புதிய ஆட்சியாளராக அவரது உறவினர் ஹைதம் பின் தாரிக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நவீன அரபு உலகில் நீண்ட ஆண்டுகள் வெற்றிகரமாக ஆட்சி செய்தவர் என்ற பெருமையை பெற்றவர் ஓமன் மன்னர் காபூஸ். 1970ல் தனது தந்தை சயித் பின் தைமூரின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு பதவிக்கு வந்த காபூஸ், நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றார். எண்ணெய் வளமிக்க ஓமனில் பல்வேறு நவீன வசதிகளை ஏற்படுத்தி, சிறப்பான வெளியுறவுக் கொள்கையால் அண்டை நாடுகளின் ஆதரவையும் பெற்றார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் அவர் கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், காபூஸ் நேற்று காலமானதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அவருக்கு வயது 79. காபூஸ் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருக்கு மகன்கள் இல்லை. தனக்கு பின் யார் ஆட்சி நிர்வாகத்தை ஏற்பார் என்பதையும் அறிவிக்கவில்லை. இதனால், மன்னர் குடும்பத்தினர் ஆலோசனை நடத்தி, காபூஸின் உறவினர் ஹைதம் பின் தாரிக்கை புதிய ஆட்சியாளராக தேர்வு செய்தனர். முறைப்படி அவர் புதிய மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

மறைந்த காபூஸ் எழுதிய கடிதத்தில் ஹைதம் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதால் அவர் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தகவல் தெரிவிக்கிறது. ஓமனின் கலாச்சார அமைச்சராக ஹைதம் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. காபூஸ் மறைவுக்கு பல்வேறு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மோடி இரங்கல்
ஓமன் மன்னர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘ஓமன் மன்னர் காபூஸ் மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன்.  தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்ட அவர், ஓமனை நவீன, வளமான நாடாக மாற்றியவர். ஓமனுக்கும் உலகுக்கும் சமாதானத்தின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்தார்,’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Death ,King ,Oman , King of Oman, Kaboos, death
× RELATED காய்கறிகளின் அரசன் முருங்கை