×

உக்ரைன் பயணிகள் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்திவிட்டோம்: ஈரான் பகிரங்க ஒப்புதல்

டெஹ்ரான்: உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தி விட்டதாக ஈரான் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளது. ஈரானின் ராணுவ தளபதி காஸ்சிம் சுலைமானியை அமெரிக்க ராணுவம் டிரோன் தாக்குதலில் கொன்றதற்கு பழி தீர்க்க, ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அந்த சமயத்தில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் நடுவானில் தீப்பிடித்து கீழே விழுந்து வெடித்து சிதறியது. அதில் பயணம் செய்த 176 பேரும் பலியாயினர். அவர்களில் பெரும்பாலானோர் ஈரான்-கனடா இரட்டை குடியுரிமை பெற்றவர்கள். மேலும் உக்ரைன், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, சுவீடன் நாட்டை சேர்ந்தவர்களும் இருந்தனர்.

ஈரான் ராணுவம்தான் உக்ரைன் விமானத்தை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியிருப்பதாக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட  மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக சில வீடியோக்களும் வெளியிடப்பட்டது. இந்த வீடியோக்கள் முழு ஆய்வுக்கு உட்படுத்தி நிரூபணமானவை என அமெரிக்காவின் நியூயார்க் டைம்சும் உறுதி செய்தது. ஆனாலும், ஈரான் ஒப்புக் கொள்ளவில்லை. ஏவுகணை தாக்குதலால் விமானம் சுடப்படவில்லை என்றே கூறி வந்தது. மேலும், விமான விபத்து தொடர்பான விசாரணையில் பங்கேற்க அமெரிக்கா, உக்ரைன், கனடா உள்ளிட்ட நாடுகளுக்கும் அழைப்பு விடுத்தது.

இந்த விஷயத்தில் ஈரானுக்கு சர்வதேச நெருக்கடிகள் அதிகரித்த நிலையில், வேறு வழியின்றி நேற்று தனது தவறை ஒப்புக் கொண்டது. இது தொடர்பாக ஈரான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘எதிரியின் அச்சுறுத்தல் அதிகளவில் இருந்த சமயத்தில், அது எதிரி நாட்டு விமானம் என தவறாக நினைத்து உக்ரைன் ஏர்லைன்சின் போயிங் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த பெரும் தவறு குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தவும், பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்தவும், இறந்தவர்களின் உடல்களை திருப்பி தரவும், இழப்பீடு வழங்குவதற்கும், தூதரக ரீதியாக அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதற்கும் ஈரான் உறுதியளிக்கும்,’ என தெரிவித்தது.

இது ஈரானுக்கு பெரும் சிக்கலை உண்டாக்கி உள்ளது. ஏற்கனவே, ஈரான் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழல் இருக்கும் நிலையில், இந்த விஷயத்தை அமெரிக்கா நிச்சயம் சாதாரணமாக விட்டு விடாது. உலக நாடுகளும் ஈரான் மீது அதிருப்தி அடைந்துள்ளதால், அமெரிக்காவிடம் பகையை தீர்க்கப் போய் இப்போது சர்வதேச அளவில் விரோதத்தை சம்பாதித்துள்ளது.

மன்னிக்க முடியாத தவறு செய்துவிட்டோம்
ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தனது டிவிட்டர் பதிவில், ‘பேரழிவு தவறுக்காக ஈரான் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. இதில் ராணுவத்தின் விசாரணை நிறைவடைந்துள்ளது. அதில், மனித தவறால் உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு, 176 அப்பாவிகள் பலியாகி இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த மன்னிக்க முடியாத தவறு குறித்து சட்ட ரீதியான விசாரணை நடந்து வருகிறது,’’ என்றார். அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜரிப் தனது டிவிட்டர் பதிவில், ‘அமெரிக்காவின் சாகசத்தால், மனித தவறு நிகழ்ந்து பேரழிவுக்கு வழி வகுத்துள்ளது,’ என வருத்தம் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் கொந்தளிப்பு
ஈரான் தனது தவறை ஒப்புக் கொண்ட நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது பேஸ்புக் பதிவில், ‘தவறுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தி கடுமையான தண்டனையை ஈரான் வழங்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதோடு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டையும் தர வேண்டும்.’ என வலியுறுத்தி உள்ளார்.

Tags : Ukrainian ,Iran , Ukraine passenger plane, Iran, approved
× RELATED இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...