×

நாடு முழுவதும் உள்ள பீடி தொழிலாளர் மருந்தகங்கள் நவீன வசதிகளுடன் மருத்துவமனைகளாக தரம் உயர்த்த தொழிலாளர் நலத்துறை முடிவு

வேலூர்: தமிழகத்தில் உள்ள பீடி தொழிலாளர் மருந்தகங்கள் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகளாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் பீடி தொழிலாளர்களுக்கான மருந்தகம் இயங்கி வருகிறது. இங்கு பீடி தொழிலாளர்களுக்கான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நெல்லை, திருச்சி, வேலூர் என மொத்தம் 5 லட்சம் பீடி தொழிலாளர்கள் உள்ளனர். இதில், வேலூர் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சம் பீடி தொழிலாளர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய தொழிலாளர் நலத்துறையின் கீழ் பீடி தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் புகையிலை தடுப்பு சட்டம் மற்றும் விதிமுறைகளால் பீடி தொழில் நலிவடைந்தது. ஏராளமான தொழிலாளர்கள் பீடி தொழிலை கைவிட்டு கட்டுமானத் தொழிலுக்கு மாறிவிட்டனர். தற்போது 50 சதவீதத்திற்கும் குறைவாகவே பீடி தயாரிக்கும் தொழில் நலிவடைந்து வருகிறது. இதனால் மருந்தகத்திற்கு வரும் பீடி தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில், பீடி தொழிலாளர்களுக்காக இயங்கி வந்த மருந்தகங்கள் மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்பட உள்ளது.

இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் பீடி தொழிலாளர்களுக்கான மருந்தகங்கள் சிறப்பாக இயங்கி வருகிறது. இந்நிலையில், பீடி உற்பத்தி பாதிப்பு காரணமாக மருந்தகத்திற்கு வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பீடி தொழிலாளர் மருந்தகங்கள் தரம் உயர்த்த மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, பீடி தொழிலாளர் மருந்தகங்கள் மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்நோயாளிகள் பிரிவு, ஆய்வகம், மருந்தகம், படுக்கை வசதிகளுடன் உள்நோயாளிகள் பிரிவும் தொடங்கப்பட உள்ளது. பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்படும் தொழிலாளர்கள் சிகிச்சை பெறும் வகையில் அனைத்துதுறை சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இதுதொடர்பாக நாடு முழுவதும் தொழிலாளர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பீடி தொழிலாளர் மருந்தகங்கள் கண்டறியும் பணி நடந்து வருகிறது. இதற்கென சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த மருத்துவமனையின் மூலமாக தொழிலாளர்களுக்கான சிறப்பு மருத்துவம் மேலும் விரிவுபடுத்தப்படும். நவீன மருத்துவமனையில் பீடி தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாமல், நெசவாளர்கள், அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், ரிக்‌ஷா ஓட்டுனர்கள் ஆகியோருக்கும் இந்த மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதுதொடர்பான பூர்வாங்கப் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த திட்டம் வரும் மார்ச் மாதம் முறையாக அறிவிக்கப்படும், என்றனர்.

Tags : Labor Department ,country ,facilities ,hospitals , Pharmacies
× RELATED நாடாளுமன்ற தேர்தல் தினத்தில்...