×

ஆந்திராவின் புதிய தலைநகரம் எது? ஜெகன்மோகன் அரசின் அறிவிப்பால் குழப்பத்தில் தவிக்கும் மக்கள்

திருமலை: புதிதாக பதவியேற்ற ஜெகன்மோகன் அரசின் அறிவிப்பால் ஆந்திராவின் புதிய தலைநகரம் எது? என்று மக்கள் குழப்பத்தில் தவித்து வருகின்றனர். தெலங்கானா பகுதியில் இருந்த பொதுமக்கள் தங்கள் மாநிலத்தில் வரும் வருவாயை ஆந்திர மாநிலத்தில் உள்ள பொதுமக்களுக்கு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறியும் தெலங்கானா பகுதியில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் இட ஒதுக்கீடு செய்யப்படுவது இல்லை என்றும் குற்றச்சாட்டு கூறி தனி தெலங்கானா மாநிலத்திற்கு போராட்டம் நடத்தி வந்தனர். தனி தெலங்கானா மாநிலத்திற்காக தற்போதைய முதல்வர் சந்திரசேகர ராவ் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஏற்படுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார். இதையடுத்து 2014 ஜூன் மாதம் அப்போதைய மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி ஆந்திரா, தெலங்கானா என மாநிலத்தை பிரித்தது. மாநில பிரிவினைக்கான மசோதாவில் 10 ஆண்டுகளுக்கு ஆந்திரா, தெலங்கானா இரு மாநிலத்திற்கும் ஐதராபாத் ஒருங்கிணைந்த தலைநகராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் குண்டூர் மாவட்டத்தில் மூன்று மண்டலங்களில் உள்ள 29 கிராமங்களில் ஒருங்கிணைத்து அமராவதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவித்து தற்காலிக  தலைமைச்செயலகம், சட்டப்பேரவை கட்டிடம், உயர் நீதிமன்றம் அமைத்து முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சி நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. தொடர்ந்து, அக்கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ஆந்திர முதல்வராக பொறுப்பேற்றார். சந்திரபாபு, ஆந்திர முதல்வராக இருந்த 5 ஆண்டுகாலத்தில் அவரது முழு கவனமும் தலைநகர் அமராவதியை அபிவிருத்தி செய்வதிலேயே இருந்தது. இதற்காக சர்வதேச அளவில் புகழ்பெற்ற கட்டிட வடிவமைப்பு நிறுவனமான நார்மன் பாஸ்டர் நிறுவனத்தின் மூலம் அமராவதி தலைநகர் வடிவமைக்கப்பட்டது.

ஆனால், ஜெகன்மோகன் முதல்வரான பின் தலைநகர் அமராவதியில் நடைபெற்று வந்த அபிவிருத்தி பணிகள் அனைத்தும் முடக்கி வைக்கப்பட்டன. ஆந்திர மாநிலத்தின் நகராட்சிகள் மற்றும் நகரங்கள் அபிவிருத்தித் துறை அமைச்சர் சத்யநாராயணா விஜயவாடாவில் அளித்த பேட்டி ஒன்றில், தலைநகர் அமராவதி பாதுகாப்பான பகுதி கிடையாது. அமராவதிக்கு வெள்ள ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அமராவதியில் நடைபெறும் தலைநகர கட்டுமானப் பணிகளுக்கு ஒன்றுக்கு இரண்டாகச செலவு செய்யும் நிலை உள்ளது. இதனால் மக்களின் வரிப்பணம் விரயமாகிறது. எனவே ஆந்திர மாநிலத்துக்கு வேறு ஒரு தலைநகரை தேர்வு செய்யும் பணி பற்றிய ஆலோசனை நடைபெற்று வருகிறது என்றார்.

அமராவதி என்ற பெயரில் சந்திரபாபு, அவரது மகன், முன்னாள் அமைச்சர்கள் ஆதரவாளர்கள் என அவர்களின் வீடுகளில் பணி புரியக்கூடிய டிரைவர்கள், பணியாட்கள் பெயரில் அமராவதி தலைநகர் அறிவிப்பதற்கு முன்பே பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை அந்த பகுதியில் வாங்கி குவித்துள்ளனர். அவர்கள் லாபம் அடையவேண்டும் என்பதற்காக அமராவதி தலைநகரை ஏற்பாடு செய்ய திட்டமிட்டிருப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி அரசு குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் சட்டப்பேரவை குளிர்கால கூட்டத் தொடரின் கடைசி நாளில் ஜெகன்மோகன் மாநிலத்தில் சம வளர்ச்சி அடைய வேண்டும் என கூறி விசாகப்பட்டினத்தில் நிர்வாகத் தலைநகரம், தற்போது உள்ள அமராவதியில் சட்டப்பேரவை தலைநகர், கர்னூலில் உயர் நீதிமன்றம் அமைக்கலாம் என தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக ஆந்திர மாநில தலைநகராக அமராவதி இருந்த நிலையில் தற்போது ஆந்திர தலைநகர் எது என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது. தலைநகர் உள்ள இடத்தில் சட்டப்பேரவை, தலைமைச் செயலகம், உயர் நீதிமன்றம் என அனைத்து அரசு அலுவலகங்களும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் ஆனால் ஜெகன்மோகனின் இந்த முடிவு நிர்வாக ரீதியாக செயல்படுத்த முடியாது என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

மேலும் அமராவதி தலைநகருக்காக சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்தபோது 34 ஆயிரம் ஏக்கர் நிலங்களை விவசாயிகள் வழங்கிய நிலையில் அவர்களின் நிலை கேள்விக்குறியாக மாறியுள்ளதாகவும் தலைநகருக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய நியாயம் கிடைக்கச் செய்து பின்னர் தலைநகரை குறித்து முடிவு செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர். இதற்கிடையே ஆந்திராவின் நிரந்தர தலைநகராக இந்த பகுதி இருக்கும் என்று தெரியாத நிலையில் பொதுமக்களும் மாணவர்களும் குழப்பத்தில் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத் செயல்பட்டு வந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு அமராவதி என மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டு வந்தது.

தற்போது அமராவதியும் இல்லை என கூறப்பட்டுள்ள நிலையில் புதிய தலைநகர் எங்கு அமையும் என்று காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் வெளியிடப்பட்ட வரைபடத்தில் ஆந்திர தலைநகர் அமராவதி என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைபடத்தில் ஆந்திர தலைநகர் எந்த இடம் என்று குறிப்பிடப்படவில்லை.அரசின் முடிவால் மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

4வது தலைநகரை நோக்கி...
சந்திரபாபு கனவு தலைநகர் அமைக்க ₹1 லட்சத்து 10 ஆயிரம் கோடி நிதி தேவை என அவர்கள் ஆட்சியில் இருந்தபோது திட்டம் வடிவமைக்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு தலைநகரை உருவாக்குவதற்காக ₹1 லட்சம் கோடியை ஒரு இடத்தில் செலவு செய்வதை காட்டிலும் மாநிலத்தில் உள்ள நகரில் இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளை வைத்து தலைநகரை அமைத்துக் கொள்ளவேண்டும் என ஜெகன்மோகன் அரசு கூறி வருகிறது. ஏற்கனவே 3 தலைநகரம் கண்ட ஆந்திர மாநிலத்தில் ஆரம்பத்தில் சென்னை மாகாணமாக இருந்து, பின்னர் கர்னூல், அடுத்து ஐதராபாத், மூன்றாவதாக அமராவதி என்று இதுவரை மூன்று தலைநகரங்களைப் பார்த்த ஆந்திர மாநிலம், தற்போது 4வது தலைநகரத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது.

Tags : capital city ,Andhra Pradesh ,government ,Jaganmohan ,announcement , Jagan Mohan
× RELATED NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின்...