×

தர்பார் படத்திற்கு எதிராக வாட்ஸ் அப்பில் குரல் பதிவு வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை: லைகா தலைமை செயல் அதிகாரி கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: தர்பார் படம் பார்க்க யாரும் தியேட்டருக்கு செல்ல வேண்டாம். இந்த படம் வசூலே ஆக கூடாது. அடிச்சு காலி பண்ணுங்க என்ற குரல்  பதிவு செய்து வாட்ஸ்-அப்பில் வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லைகா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கண்ணன்  நேற்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் கடந்த 9ம் தேதி திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அந்த படம் இணையதளத்தில்  திருட்டுத்தனமாக வெளியானது. தற்போது வாட்ஸ் அப்பிலும் தர்பார் திரைப்படம் வெளியாகி, படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த  சூழ்நிலையில் தர்பார் படத்தை தயாரித்த லைகா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கண்ணன் நேற்று சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ்  கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அவருடன் திரைப்பட தயாரிப்பாளர்கள் சிவா, ராஜன் ஆகியோரும் உடனிருந்தனர். பின்னர் அவர்கள் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: தர்பார் படம்  வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த படத்தை வாட்ஸ் அப்பில் ஒருவர் வெளியிட்டு, தர்பார் படம் பார்க்க  யாரும் தியேட்டருக்கு செல்ல வேண்டாம். இந்த படம் வசூலே ஆக கூடாது. அடிச்சு காலி பண்ணுங்க என்ற குரல் பதிவையும் பதிவு செய்துள்ளார்.  அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருக்கிறோம். வாட்ஸ்அப்பில் தர்பார் படம் பார்ப்பவர்கள் மீதும் நடவடிக்கை பாயும்  என்பதால், யாரும் பார்க்க வேண்டாம்.

இந்த குரல் பதிவை வெளியிட்டவரை அடையாளம் காட்டுபவருக்கு லைகா நிறுவனம் தக்க சன்மானம் வழங்கும். தியேட்டரில் இருந்து படத்தை பதிவு  செய்திருக்கிறார்கள். க்யூப் சோதனையில் எந்த தியேட்டர் என்பது தெரிந்து விடும். அதன்பேரில் அந்த தியேட்டர் மீதும் நடவடிக்கை  எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர். இந்நிலையில் படத்தை வாட்ஸ்அப்பில் வெளியிட்ட நபர் அடையாளம் காணப்பட்டதாகவும் தகவல்கள்  வெளியாகியுள்ளது.

Tags : office ,Durbar ,CEO ,Laika ,Leica , Darbar, Whatsapp, Chief Executive Officer of Leica, Commissioner
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...