×

குடிமராமத்து திட்ட அறிக்கையை விரைந்து முடிக்கும் வகையில் பொங்கல் விடுப்பு கிடையாது: பொறியாளர்கள் அதிருப்தி

சென்னை: குடிமராமத்து திட்ட அறிக்கையை விரைந்து முடிக்கும் வகையில் பொங்கல் விடுப்பு கிடையாது என்று உத்தரவிட்டு இருப்பது பொறியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குடிமராமத்து திட்டம் கடந்த 2016ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏரிகள், மதகுகள், வரத்து வாய்க்கால்கள், கால்வாய்கள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. முதற்கட்டமாக கடந்த 2016ல் ரூ.100 கோடி செலவில் 1519 பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டன. தொடர்ந்து 2017-18ம் நிதியாண்டில் 29 மாவட்டஙகளில் ரூ.328 கோடி செலவில் 1511 பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 1450 பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் 2019-2020ம் நிதியாண்டில் 29 மாவட்டங்களில் ரூ.500 கோடி செலவில் 1829 பணிகளுக்கு கடந்த ஜூன் மாதத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், 600க்கும் மேற்பட்ட பணிகள் தொடங்க வேண்டியுள்ளது.

இப்பணிகளை வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் முடிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து நடப்பாண்டில் ரூ.1000 கோடி செலவில் 5 ஆயிரம் ஏரிகள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, 5 முதல் 10 ஆண்டுகள் ஆன நிலையில் புனரமைக்கப்படாத ஏரிகளை தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டது. இப்பணிகளை வரும் ஜன.31ம் தேதிக்குள் முடிக்கவும் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஏரிகளை தேர்வு செய்து, அந்த ஏரிகளில் புனரமைப்பு பணிகளுக்கு திட்ட அறிக்கை தயார் செய்துள்ளனர். தற்போது வரை 2,500 ஏரிகள் வரை புனரமைப்பு பணிகளுக்கு அறிக்கை தயார் செய்து ஒப்படைத்துள்ளனர். இருப்பினும் அந்த அறிக்கைக்கு அரசு ஒப்புதல் பெற மாநிலம் முழுவதும் உள்ள பொறியாளர்கள் சென்னை வந்துள்ளனர். அந்த அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக திட்ட அறிக்கையில் சரிபார்த்து அதை அரசுக்கு அனுப்பி வைத்து நிதி பெற ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. இதனால், பொறியாளர்களுக்கு பொங்கல் விடுப்பு கிடையாது என்று மேலிடம் உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், பொறியாளர்கள் பலர் நேற்று பொங்கல் விடுமுறைக்காக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லவிருந்த நிலையில், பொறியாளர்கள் பலர் தனது பயணத்தை ரத்து செய்து இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நேற்றும் பொறியாளர்கள் பணிக்கு வந்தனர். அவர்கள் திட்ட அறிக்கையை அனுப்பி வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து அறிக்கைகளையும் சரிபார்த்து அரசுக்கு அனுப்பி வைத்தால் மட்டுமே விடுப்பில் செல்ல முடியும் என்பதால் பொறியாளர்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர்.

Tags : Engineers ,Citizenship Project Report: Engineers , Engineers
× RELATED புதுக்கோட்டையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி