×

பொங்கலுக்கு கூடுதல் விடுமுறை இல்லை: அரசு ஊழியர்கள் ஏமாற்றம்

சென்னை: பொங்கலுக்கு கூடுதல் விடுமுறை அறிவிக்காததால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் தீபாவளி, பொங்கல் பண்டிகை செவ்வாய் அல்லது புதன் வரும்போது தமிழக அரசு திங்கட்கிழமையை அரசு விடுமுறையாக அறிவித்து, தொடர்ச்சியாக 5 அல்லது 6 நாட்கள் விடுமுறை கிடைக்கும் வகையில் அறிவிப்பு வெளியிடும். இந்த விடுமுறையை இன்னொரு சனிக்கிழமை வேலை நாட்களாக அறிவித்துவிடும். அதேபோன்று, வருகிற 15ம் தேதி பொங்கல் பண்டிகையாகும். 16ம் தேதி மாட்டுப்பொங்கல், 17ம் தேதி காணும் பொங்கல் என தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறையாகும். இந்த நிலையில் 13ம் தேதி (திங்கள்), 14ம் தேதி (செவ்வாய்) அரசு விடுமுறையாக அறிவித்தால், தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று தமிழக அரசும் 13, 14ம் தேதி விடுமுறையாக அறிவிக்கும் என கடந்த 2 நாட்களாக செய்திகள் பரவின. ஆனால் நேற்று மாலை வரை விடுமுறை விடுவது குறித்து எந்த அறிவிப்பும் அரசு சார்பில் வெளியிடவில்லை.

இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூடுதல் விடுமுறை கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அரசு ஊழியர்கள் கவலை அடைந்தாலும், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “பொங்கல் பண்டிகையையொட்டி திங்கள், செவ்வாய் கூடுதல் விடுமுறை அரசு அறிவித்தாலும் கூடுதலாக இரண்டு சனிக்கிழமை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டியது வரும். ஆசிரியர்களாகிய நாங்கள் சனிக்கிழமை விடுமுறையையே விரும்புகிறோம். அதனால் அரசு பொங்கல் பண்டிகைக்கு கூடுதல் விடுமுறை விடாதது எங்களுக்கு மகிழ்ச்சியே” என்றனர். அதேநேரம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் அலவலகங்களில் 11ம் தேதி (நேற்று) முதல் 19ம் தேதி வரை தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவலர்களுக்கு மட்டுமே இந்த தொடர் விடுமுறை பொருந்தும் என்றும், பணியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் வழக்கம்போல் திங்கள், செவ்வாய் பணிக்கு வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : holidays ,servants , Civil servants
× RELATED 1.73 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை...