×

குடியரசு தின விழாவை சீர்குலைக்க சதி: 300 தீவிரவாதிகள் ஊடுருவ திட்டம்

புதுடெல்லி: குடியரசு தினத்தை சீர்குலைக்க 300 தீவிரவாதிகள் எல்லையில் ஊடுருவி பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் வெளியாகி உள்ளது. அதனால், அனைத்து மாநில அரசுகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் உஷார் படுத்தி உள்ளது. நாட்டின் 70வது குடியரசு தினவிழா வருகிற 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை சீர்குலைக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக உளவுத்துறையினர், மத்திய அரசை எச்சரித்துள்ளனர். இதையடுத்து அனைத்து மாநில அரசுகளும் உஷார் நிலையில் இருக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது: 300 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைய தருணம் பார்த்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கி உள்ளனர். இவர்களில் ஏராளமானோர் ஆப்கன் நாட்டைச்சேர்ந்தவர்கள். இவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் போர்ப்பயிற்சி அளித்துள்ளது.

பயிற்சி முடித்த இவர்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள நீலம், லீபா மற்றும் டங்தார் பள்ளத்தாக்குகளில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஆப்கனில் போர் பயிற்சி பெற்ற 60 பேரை இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கு தலைமை ஏற்பதற்காக பாகிஸ்தான் ராணுவம் தேர்வு செய்துள்ளது. அவர்களும் இந்த 300 தீவிரவாதிகள் பட்டியலில் இணைந்துள்ளனர். எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் ஆப்கன் வீரர்கள் தலைமையில் தான் தீவிரவாத முகாம்கள் இயங்கி வருகிறது. அவர்கள் எந்த நேரத்திலும் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தலாம். அதற்கான வாய்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இவ்வாறு மத்திய உள்துறை எச்சரித்துள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லையில் பதுங்கியிருந்த தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தன. இதில் ஏராளமான தீவிரவாதிகள் பலியானதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும் ராணுவ தாக்குதலை தொடர்ந்து, பெரும்பாலான தீவிரவாதிகள் ஓட்டம் பிடித்துவிட்டனர். ஆனால், தற்போது புதிய முகாம்களை அமைத்து வருவதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஜெயஷ் இ முகமது இயக்க தலைவர் மசூத் அசாரின் சகோதரர் முப்தி ரவூப் அஸ்கர் இந்தியாவில் தாக்குதல்களுக்குத் திட்டமிட்டு வருவதாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள், இந்திய நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக இந்திய புலனாய்வு அமைப்புகளால் தகவல் பகிரப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னால் இருப்பதாகக் கருதப்படும் அஸ்கர், கடந்த ஆண்டு ஆகஸ்டில் பஹவல்பூரில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஒரு கூட்டத்தை நடத்தியதாகவும், இந்தியாவுக்குள் அதிகளவு ஊடுருவல்களை அனுப்ப லாஞ்ச்பேட் தளபதிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் அதிகாரிகள்
தெரிவித்தனர். மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2019ம் ஆண்டில் 157 தீவிவாதிகள் கொல்லப்பட்டதன் பின்னணி, ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, பிரிவினைவாதிகள் கைது போன்றவற்றால் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத குழுக்கள், இந்தியா மீதான தாக்குதலை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. துணையோடு இந்த தீவிரவாதிகள் இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அவர்களுக்கு ஆப்கன் தாலிபன்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தீவிரவாதிகள் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த குறிவைத்திருப்பதாக தொலைபேசி உரையாடல்களை இடைமறித்து கேட்ட இந்திய ராணுவ உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர். பனிக்காலம் என்பதால் பதுங்கியுள்ள தீவிரவாதிகள் கோடையில் பனி உருகத் தொடங்கும் போது இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிக்கலாம் என ராணுவத்தினருக்கும், மாநில அரசாங்கத்திற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,” காஷ்மீர் அமைதிக்கு தற்போது மிகப்பெரிய பிரச்னையாக ஆப்கன் தீவிரவாதிகள் மாறியுள்ளனர். அங்கு வெளிநாட்டு தீவிரவாதிகள் பலர் ஊடுருவி உள்ளனர். அவர்கள் மிகச்சிறந்த போர் வீரர்கள். எனவே மிகப்பெரிய தாக்குதல் சதியோடு அத்தனை தீவிரவாதிகளும் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர்.

ஆப்கன் போர் கைதிகளாக பிடிபட்டு விடுவிக்கப்பட்ட தீவிரவாதிகள் தற்போது காஷ்மீரை குறிவைத்து ஊடுருவி வருகிறார்கள். எனவே காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு சார்பில் எல்லைப்பகுதியில் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. எனவே காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளன’’ என்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : celebration ,militants ,Republic Day , Militants
× RELATED திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்