×

களிமண் எடுக்க அனுமதிக்காததால் மண்பாண்டங்கள் விலை அதிகரிப்பு: அரசு மீது தொழிலாளர்கள் குற்றச்சாட்டு

சென்னை: களிமண் எடுக்க அனுமதிக்காததால் மண்பாண்டங்கள் விலை அதிகரித்துள்ளதாக தமிழக அரசு மீது மண்பாண்ட தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து மக்கள் தேசிய கட்சி தலைவரும், மண்பாண்ட தொழிலாளர்கள் நல வாரிய முன்னாள் தலைவருமான சேம.நாராயணன் நேற்று விடுத்துள்ள அறிக்கை: பொங்கல் திருநாளையொட்டி கல்லூரிகளில் தமிழ் இலக்கிய கலாச்சாரம், கிராமிய பண்பாடு, ஆடல், பாடல்களோடு மாணவிகள் மண்பானையில் பொங்கலிட்டு கொண்டாடி வருகிறார்கள். உணவுகளை மண்பாண்டங்களில் சமைக்க வேண்டும் என்று ஆசிரியர்களோடு மாணவிகளும் விழிப்புணர்வை தமிழ் மரபோடு வெளிப்படுத்தியுள்ளனர். இது பாராட்டுக்குரியது. வரவேற்கத்தக்கதாகும். மண்பாண்டங்களில் சமைக்கப்படும் உணவு உடல் ஆரோக்கியத்தையும், மீதமிருக்கும் உணவுகள் மண்பாண்டங்களில் வைப்பதால் கெட்டுப்போகாமல் இருக்கும்.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது மட்டும் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மண்பானைகளில் பொங்கல் வைக்கிறார்கள். அதேநேரத்தில் சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் உலோக பாத்திரங்களுக்கு இணையாக மண்பானைகள் விலை உயர்ந்துள்ளது என்று மக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

இதற்கு காரணம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் களிமண் எடுப்பதற்கு அரசு அனுமதிப்பதில்லை. எனவே, மண்பாண்டங்களை வெளிமாவட்டங்களில் இருந்து மண்பாண்ட தொழிலாளர்கள் வாகனம் மூலமாக வாங்கி வந்து விற்பனை செய்வதால் அதிக விலைக்கு விற்கப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு அரசு தான் காரணம். பொங்கல் பண்டிகைக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் களிமண் எடுக்க அனுமதி வழங்கினால் மண்பாண்டங்கள் உற்பத்தியும் அதிகரிக்கும். இங்கேயே தயாரிப்பதால் போக்குவரத்து செலவினமும் குறையும். அதன்மூலம் விலை குறைவாக மண்பாண்டங்கள் கிடைக்கும். எனவே, தமிழக அரசு வரும் பொங்கல் தினத்தில் இருந்தாவது இந்த நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Accusation
× RELATED பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற...