×

குடிநீர்வாரியம் செலுத்த வேண்டிய மின்கட்டணம் உடனே வசூலிக்க மின்சாரவாரியம் திட்டம்

சென்னை: குடிநீர்வாரியம் செலுத்த வேண்டிய மின்கட்டணத்தை உடனே வசூலிக்க மின்சாரவாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக கண்காணிப்பு பொறியாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் வீடு மின்இணைப்புகளுக்கு- 2 கோடி, விவசாய இணைப்புகள்- 21 லட்சம், வணிகம் - 30 லட்சம் இணைப்புகள் என மொத்தம் 2.90 கோடிக்கும் மேலான இணைப்புகள் உள்ளன. இது ஆங்காங்குள்ள மின்வாரிய பிரிவு அலுவலகங்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வீடுகளில் 100 யூனிட் வரை இலவச மின்சாரமும், 500 யூனிட் கீழ் மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக வாரியத்திற்கும் ஏற்படும் செலவு தொகையை, அரசு வழங்கி வருகிறது. விவசாய இணைப்புகள் முற்றிலும் இலவசமாகும். வீடு சார்ந்த மின் இணைப்புகளை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஊழியர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். அப்போது அங்குள்ள மீட்டரில் பதிவாகியிருக்கும் பயன்பாட்டு அளவை கணக்கீடு செய்ய வேண்டும். பிறகு அந்த விபரத்தை நுகர்வோரிடம் உள்ள மின்கணக்கீட்டு அட்டையில் எழுத வேண்டும். பின்னர் அலுவலகத்திற்கு வந்து, அங்குள்ள கணினியில் பதிவு செய்ய வேண்டும்.

ஊழியர் வந்து கணக்கு எடுத்ததில் இருந்து 20 தினங்களுக்குள், நுகர்வோர் கட்டணத்தை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால் அபராதத்துடன் கட்டணம் செலுத்த நேரிடும். இதேபோல் மின்சாரவாரியத்தின் சார்பில், மாநகராட்சி, குடிநீர்வாரியம், பள்ளி, கல்லூரி போன்றவற்றிக்கும் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் பணம் செலுத்துவதில்லை. சிலஇடங்களில் 5-6 மாதங்கள் கழித்துக்கூட பணம் கட்டப்படுகிறது. இதனால் மின்சாரவாரியத்திற்கு பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்நிலையில் குடிநீர்வாரியம் செலுத்த வேண்டிய நிலுவைத்ெதாகையை உடனே வசூலிக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: குடிநீர் வாரியம் பலஇடங்களில் மின்சாரவாரியத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தவில்லை. இதனால் வாரியத்திற்கு இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது குடிநீர் வாரியம் செலுத்த வேண்டிய தொகையை உடனே வசூலிக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து அனைத்து கண்காணிப்பு பொறியாளர்களுக்கு தலைமை அலுவலகத்திலிருந்து, தங்களது பகுதியில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தின் நிலுவைத்தொகையை உடனே வசூலிக்க வேண்டும் என கூறியுள்ளது. மேலும் குடிநீர் வாரியத்திற்கு வழங்கப்பட்டுள்ள இணைப்புகள் குறித்த விபரத்தையும் உடனே அனுப்பும்படி கூறியுள்ளது. தற்போது அதற்கான பணியில் தீவிரம் காட்டி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினர்.

Tags : Electricity Board , Electricity Board
× RELATED பெரம்பலூரில் மின்கம்பிகளை உரசிய மரக்கிளைகளை அகற்றும் பணி