×

சேலம் அருகே ஒன்றியத்தலைவர் தேர்தலின் போது திமுகவினர் மீது போலீசார் தாக்குதல்

சேலம்: சேலம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய குழு தலைவர் தேர்தலின் போது, திமுகவினர் மீது போலீசார் தாக்கல் நடத்திய சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. திமுக தரப்பில்  ஹேமலதா விஜயகுமார், அதிமுக தரப்பில் பார்வதி மணி ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இதையொட்டி 200 போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். திமுக ஆதரவாளர்கள், அதிமுக ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். ஒரு பகுதியில் அதிமுகவினரும், இன்னொரு பகுதியில் திமுகவினரும் பிரித்து அனுப்பப்பட்டனர்.  காலை 10 மணியளவில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் 10 பேர், அலுவலகத்தின் வெளியில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதேபோல், அதிமுகவிற்கு ஆதரவு தெரிக்கும் 9 பேரும் வரிசையாக உள்ளே சென்றனர்.

 இருதரப்பினரும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என கூறிக்கொண்டு பட்டாசு, மாலையை தயாராக வாங்கி வைத்திருந்தனர். இந்த நிலையில், மதியம் 12.30 மணியளவில் அதிமுக வேட்பாளர் பார்வதி மணி, 10 ஓட்டுகள் வாங்கியதாகவும், திமுக தரப்பில் 9 ஓட்டுகள்  வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் திமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். எங்களுக்கு 10 ஓட்டுகள் இருக்கிறது. எப்படி அதிமுகவினர் வெற்றி பெறுவார்கள் என கேட்டு, ஒன்றிய அலுவலகத்தை நோக்கி வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போலீசார் திமுகவினர் மீது பாய்ந்தனர். பதிலுக்கு திமுகவினரும் எதிர் கேள்வி கேட்டனர்.

 வாக்குவாதம் முற்றவே திமுக ஆதரவாளர்கள் 10 பேரை போலீசார் கடுமையாக தாக்கினர். மேலும், லத்தியால் அடித்தபடி போலீஸ் வாகனத்தில்  அனைவரையும் ஏற்றினர். இதனால் அப்பகுதியில் நின்றவர்கள் சிதறி ஓடினர். வாகனத்தில் ஏற்றப்பட்ட திமுகவினர் 10 பேரும், கன்னங்குறிச்சி  போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டனர். திமுக ஆதரவாளர் ஒருவர் அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு போட அதிகாரி ஒருவர் உதவி  செய்ததாக புகார் எழுந்துள்ளது.

Tags : DMKers ,election ,Union ,police attack ,Salem Salem ,union election , Salem, Union President, DMK, Police
× RELATED தேர்தல் நேரத்தில் ஒன்றிய அரசு...