×

சொந்த ஊரில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து 4 லட்சம் பேர் பயணம்: பஸ், ரயில்நிலையங்களில் கூட்டம் அலைமோதியது

சென்னை: சென்னையிலிருந்து சுமார் 4 லட்சம் பேர் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச்சென்றுள்ளனர். இதனால்  பஸ், ரயில்நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், சென்னையில் வசிக்கின்றனர்.  இங்கிருந்து படிப்பு, பணி, வணிகம் சார்ந்த பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஒவ்ெவாரு ஆண்டும் தீபாவளி, பொங்கல்  பண்டிகையின் போது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம்.  அந்தவகையில் இவ்வாண்டுக்கான பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி  கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி நேற்று முன்தினம் முதல் பலரும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச்செல்ல துவங்கிவிட்டனர். இவ்வாறு சொந்த ஊர்களுக்கு செல்வோரின்  வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழங்கள் சார்பில் நேற்று முன்தினம் முதல் வரும் 14ம் தேதி வரையில் 5 நாட்களுக்கு, தமிழகம் முழுவதும் 30,120  பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கூட்டநெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் 5 இடங்களிலிருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. இங்கு,  மாநகரின் பல்வேறு இடங்களிலிருந்து வருவோரின் வசதிக்காக எம்டிசி சார்பில் 310 இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்பட்டு  வருகிறது. இதன்படி சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர்.

 இதனால் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் மட்டும் அல்லாது தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம்;  மாதவரம் புதிய பேருந்து நிலையம்; பூவிருந்தவல்லி நகராட்சி பேருந்து நிலையம் மற்றும் கே.கே.நகர் மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து  நிலையம் ஆகிய  இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல் சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில்நிலையங்களிலிருந்து நாள்தோறும்  இயக்கப்படும் 15க்கும் மேற்பட்ட ரயில்களுடன் சேர்த்து கூடுதலாக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. இந்த ரயில்கள் திருச்சி, மதுரை, கோவை,  நெல்லை போன்ற முக்கிய இடங்களுக்கு செல்கின்றன. இவற்றிலும் கூட்டம் மிகுந்து காணப்பட்டது. பலரும் தொங்கியபடி பயணித்தனர்.

இதேபோல் கோயம்பேட்டிலுள்ள தனியார் ஆம்னி பஸ் ஸ்டாண்டிலிருந்து பல்வேறு முக்கிய இடங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களிலும் பலர்  பயணித்தனர்.  சொகுசாகவும், விரைவாகவும் பயணிக்க விரும்பும் பலர் இதில் பயணித்தனர். இதனால் அனைத்து ஆம்னி பஸ்களிலும் கூட்டம்  அதிகமாக இருந்தது. மேலும் பலர் கார், வேன் போன்றவற்றிலும் சொந்த ஊர்களுக்கு சென்றனர். மொத்தமாக 4 லட்சம் பேர் சென்னையிலிருந்து  பயணித்துள்ளனர். இதன் காரணமாக அனைத்து சாலைகளிலும் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்பட்டது. ஆங்காங்குள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள்  ஊர்ந்தவாறு சென்றது. இதையடுத்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ஆங்காங்கு போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில்  ஈடுபட்டனர்.

மேலும் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட், எழும்பூர், சென்ட்ரல் ரயில்நிலையம் ேபான்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வழக்கமாக இருக்கும்  கண்காணிப்பு கேமராவுடன், கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடைகள் மிகுந்து  காணப்படும் பகுதியான தி.நகரில் பல்வேறு விதமான பொருட்களை வாங்குவதற்காக மக்கள் குவிந்தனர். இதனால் இப்பகுதியிலும் பல்வேறு  இடங்களில் கேமராக்கள் பொருத்தியும், தொடர் ரோந்திலும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

சென்னை போக்குவரத்து காவல் துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை,  துத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், அரியலூர்,  திட்டக்குடி, செந்துறை, ஜெயங்கொண்டம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, இராமநாதபுரம், சேலம்,  கோயம்புத்தூர், எர்ணாகுளம் மற்றும் பெங்களூர்.
* மாதவரம் பேருந்து நிலையம் ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் மற்றும் ஆந்திர மாநிலப் பேருந்துகள்.
* தாம்பரம் சானட்டோரியம் திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் அதைத் தாண்டி செல்லும் பேருந்துகள்.
* பூந்தமல்லி பேருந்து நிலையம் காஞ்சிபுரம், ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர்.
* தாம்பரம் மாநகர போக்குவரத்து கழக ரயில் நிலையம் போளூர்,சேத்பட்டு,வந்தவாசி, செஞ்சி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம்  வழியாக பண்ட்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர்,  சிதம்பரம் ஆகிய இடங்களுக்கு செல்லும் பேருந்துகள்.
* தாம்பரம் ரயில் நிலைய  பேருந்து நிலையம்திருவண்ணாமலைக்கு செல்லும் பேருந்துகள்.
* கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பணிமனை கிழக்கு கடற்கரை சாலை வழியாக, புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்  இயக்கப்படுகிறது. 


Tags : festival ,Chennai ,Pongal ,hometown , Pongal Festival, Chennai, Bus, Railway Stations
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா