×

ஊரக உள்ளாட்சி தேர்தல் முறைகேட்டை தொடர்ந்து மறைமுக தேர்தலிலும் பயங்கர குளறுபடி: டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு ,.. பல இடங்களில் மோதல்

* மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில் அதிமுகவுக்கு 13 திமுகவுக்கு 12 இடங்கள்

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடந்த முறைகேட்டை தொடர்ந்து, நேற்று நடந்த தலைவர், துணை தலைவருக்கான மறைமுக தேர்தலிலும்  பயங்கர குளறுபடிகள் நடந்தன. அரிவாளுடன் நுழைந்தவர்களை தடுத்தபோது டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. பல இடங்களில் மோதல்,  தேர்தல் நடந்த அலுவலகம் சூறையாடல் நடந்தது. கடும் களேபரத்துக்குபிறகு மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் அதிமுக 13 இடத்தையும்,  திமுக 12 இடத்தையும் கைப்பற்றின. ஒரு இடத்தில் பாமக வெற்றி பெற்றது.    
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் கடந்த மாதம் 27 மற்றும் 30ம் தேதி நடந்தது.

இதில் 515 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் பதவிகளில் 513 இடங்களுக்கும், ஊராட்சி ஒன்றியங்கள் 5,090ல் 5,088 இடங்களுக்கும் முடிவுகள்  அறிவிக்கப்பட்டது. மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களில் திமுக 243 இடங்களையும், ஒன்றிய கவுன்சிலர்களில் 2099 இடங்களையும் பெற்று முதலிடம்  வகித்தது. அதிமுகவுக்கு முறையே 214, 1,781 இடங்களே கிடைத்தன. திமுக கூட்டணியில் மாவட்ட கவுன்சிலருக்கு காங்கிரஸ்22, இந்திய கம்யூ 7,  மார்க்சிஸ்ட் 2 இடங்களையும், அதிமுக கூட்டணியில் பாஜக 7, தேமுதிக 3 இடங்களையும் பெற்றன. மற்ற கட்சி மற்றும் சுயேட்சைகள் 22  இடங்களைபிடித்தன. ஒன்றியங்களை பொறுத்தவரை திமுக கூட்டணியில் காங்கிரஸ் 132, இந்திய கம்யூ. 62, மார்க்சிஸ்ட் 33 இடங்களையும், அதிமுக  கூட்டணியில் தேமுதிக 91, பாஜக 85 இடங்களையும் பெற்றன. மற்றவர்கள் 795 இடங்களை பிடித்தனர்.

இவர்கள் கடந்த 6ம் தேதி பொறுப்பேற்றனர். கட்சி அடிப்படையின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர்கள், உறுப்பினர்களும் பதவி ஏற்றனர்.
இதையடுத்து மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர், ஊராட்சி துணை தலைவருக்கான  மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. மாவட்ட ஊராட்சியிலும், ஊராட்சி ஒன்றியத்திலும் திமுக அதிக இடங்களை பிடித்து இருந்ததால் தலைவர்,  துணை தலைவர் பதவிகளையும் அதிகளவில் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முறைகேடுகள், அடிதடி, கவுன்சிலர்கள் கடத்தல்  போன்றவற்றால் மறைமுக தேர்தல் பயங்கர குளறுபடியுடன் நடந்தது. மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை பொறுத்தவரை 27 இடங்களில் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

மற்ற 26 பதவிகளில் அதிமுக திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், கடலூர், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தர்மபுரி மற்றும் புதுக்கோட்டை என 13 இடங்களையும், திமுக திருவள்ளூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம், நீலகிரி, மதுரை என 12 இடங்களையும், சேலத்தில் பாமகவும்வெற்றி பெற்றன.  ஊராட்சி ஒன்றிய பதவிகளில்  தலைவர் பதவியில் அதிமுக கூட்டணி 150 இடங்களையும், திமுக கூட்டணி 135 இடங்களையும் பெற்றன. தலைவர், துணை தலைவர் பதவியைப் பொறுத்தவரை பல இடங்களில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. மறைமுக தேர்தலையொட்டி பல இடங்களில் மோதல்,  போலீஸ் தடியடி, அடிதடி போன்ற வன்முறைகள் நடந்தன.

டிஎஸ்பிக்கு வெட்டு: விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கான தலைவர் பதவிக்கு திமுக சார்பில் காளீஸ்வரியும், அதிமுக சார்பில்  பஞ்சவர்ணமும் போட்டியிட்டனர். ஓட்டுப்பதிவில் இருதரப்பும் சமமாக வந்ததால், இரு கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது  அதிமுகவை சேர்ந்த சிலர் அரிவாளுடன் உள்ளே புகுந்து கல்வீச்சு நடத்தினர். அரிவாளுடன் வந்த ஒருவரை தடுத்தபோது அவர் வெட்டியதில்  அருப்புக்கோட்டை டிஎஸ்பி வெங்கடேஷன் கையில் காயம் ஏற்பட்டது. மேலும், யூனியன் அலுவலகத்தில் புகுந்த நபர்கள் கம்ப்யூட்டர்கள் மற்றும்  இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கினர். அப்போது மாற்றுத்திறனாளி ஊழியர் காயமடைந்தார். கல்வீச்சில் அலுவலக ஜன்னல் கண்ணாடிகள்  உடைந்தன. இதனால் அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திலும் திமுக வேட்பாளர் வெற்றி பெறும் நிலை இருந்ததால், அதிமுகவினர், போலீசார் மற்றும் பேரிகார்டை  தள்ளிவிட்டு, அலுவலகத்தில் புகுந்து, தேர்தல் அலுவலர் அறையை சூறையாடினர். ஜன்னல் கண்ணாடிகள், ேசர்கள் அடித்து நொறுக்கப்பட்டன.  இதனால் அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. போலீசார் நடத்திய தாக்குதல்: சேலம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலின்போது, திமுகவுக்கு 10 ஓட்டுகள் இருந்ததால் அக்கட்சி வேட்பாளர் ஹேமலதா விஜயகுமார் ஜெயிப்பார் என கருதப்பட்டது. ஆனால் 9 பேர் ஆதரவு பெற்ற அதிமுக வேட்பாளர் பார்வதி மணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த திமுகவினர் 10 பேர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றபோது போலீசார் கடுமையாக தாக்கியதோடு லத்தியால் அடித்தபடி போலீஸ் வாகனத்தில் ஏற்றி கன்னங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.

கடலூர் மாவட்டத்தில் வேப்பூர் அருகே உள்ள நல்லூர் ஒன்றியம், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஒன்றியம் ஆகியவற்றில் தேர்தல் நடத்தும்  அலுவலர் உடல்நலமில்லை, நெஞ்சுவலி என்று கூறி தலைவர், துணை தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. தேர்தல் அதிகாரிகள் மாயம்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான போட்டியில் திமுக  வேட்பாளர் சுந்தரபாண்டியன் 10 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் ரமேஷ் 5 வாக்குகளும் பெற்றதால் சுந்தரபாண்டியன் வெற்றி வெற்றதாக  அறிவிக்கப்பட்டது. மாலை 3 மணிக்கு ஒன்றியக்குழு துணைத்தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, ஒன்றியக்குழு  உறுப்பினர்கள் 15 பேரும் அலுவலக அறையில் காத்திருந்தனர். ஆனால், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மாயமானதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சருக்கு எதிர்ப்பு: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நுழைந்ததற்கு  திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகத்திற்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது கல்வீச்சு  தாக்குதலில் அலுவலக ஜன்னல் கண்ணாடி உடைந்தது. போலீசார் தலையிட்டு இருதரப்பையும் சமரசம் செய்தனர். ஒரு மணி நேரத்துக்குப்பின்  மறைமுக தேர்தல் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு பதவிக்கான மறைமுக தேர்தல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. அதிமுக  நிர்வாகிகள் திமுகவினரை உள்ளே விடக்கூடாது என அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கைகலப்பில் ஈடுபட முயன்றபோது காவல் துறையினர் தடியடி நடத்தி அதிமுகவினரை கலைத்தனர். இங்கு திமுக வெற்றி ெபற்றது.

நாகை: நாகை மாவட்டம் சீர்காழி ஒன்றியக்குழு துணை தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் உறுப்பினர்கள் தாமதமாக வந்ததால் தேர்தல் நடத்தும்  அலுவலர் அலுவலகத்தை பூட்டி தேர்தலை தள்ளி வைத்தார். அதிமுகவினர் ரகளை:திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான தேர்தலில் அதிமுக கவுன்சிலர்கள் ரகளையில் ஈடுபட்டதால், 3 மணி நேரம் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் போட்டியின்றி திமுகவை சேர்ந்த ராஜா வெற்றி பெற்றார். இதேபோல தமிழகம் முழுவதும் பல இடங்களில் மோதல்கள் ஏற்பட்டன. பல இடங்களில் அதிகாரிகள் துணையுடன் முறைகேடுகளும் நடந்ததாக புகார்கள் எழுந்தள்ளன. இந்த முறைகேடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை என்றும் தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்தள்ளன.

கட்சியும் வேண்டாம்; கரை வேட்டியும் வேணாம்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் 18 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நேற்று பிடிஓ  அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான மறைமுகத்தேர்தல் நடந்தது. இதில் சுயேச்சை உறுப்பினர் கு.அண்ணாமலை திமுகவில்  இணைந்ததையடுத்து, திமுக வேட்பாளர் அய்யாகண்ணு 11 வாக்குகள் பெற்று ஒன்றிய குழு தலைவராக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் பாரதி  7 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். மேலும், கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் 6வது வார்டு ஒன்றியக்குழு தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு  லோ.பாக்கியலட்சுமி வெற்றி பெற்றார். தேர்தலின்போது இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

நேற்று முன்தினம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், ஒன்றியக்குழு தலைவர் தேர்தலையொட்டி திருவண்ணாமலை தனியார் மருத்துவமனையில் இருந்து, ஆம்புலன்ஸில் வந்து நேற்று அவர் வாக்களித்தார். அதிமுக தோல்வியடைந்ததால் அதிர்ச்சியடைந்த அதிமுக தொண்டர்கள், அதிமுகவில் ஒற்றுமையில்லை. ஒற்றுமையாக இருந்திருந்தால் தலைவர் பதவியை பிடித்திருக்கலாம். எனவே கட்சியும் வேண்டாம், அதிமுக கரைவேட்டியும் வேண்டாம், இனிவரும் காலங்களில் இந்த வேட்டியை கட்டமாட்டோம்’ எனக்கூறி அதிமுகவினர் 5க்கும் மேற்பட்டோர் தங்களது வேட்டியை கழற்றி சாலையில் போட்டு தீயிட்டு எரித்தனர்.

ஒன்றியங்கள் நிலவரம்
மொத்தமுள்ள 314 ஒன்றியங்களில் பல இடங்களில் தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள ஒன்றியங்களில் கட்சிகள் வாரியாக பெற்ற இடங்கள்  வருமாறு:
            தலைவர்    து.தலைவர்
அதிமுக            140    94
தி.மு.க.            125    107
காங்கிரஸ்        5    8
பா.ம.க.            7    19
இந்திய கம்யூ.        3    3
பா.ஜ.க.            3    4
அமமுக            2    5
தேமுதிக            7
சுயேச்சைகள்        2    26
தேர்தல் நடக்காத இடங்கள்    27    41

மாவட்டங்களில் யார்?
மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் அதிமுக 13-லும், கூட்டணி கட்சியான பா.ம.க. ஒன்றிலும் தலைவர் தேர்தலில் வெற்றி  பெற்றுள்ளன. தி.மு.க. 12 தலைவர் பதவிகளை பிடித்துள்ளது. அதன் விவரம்:
மாவட்டங்கள்    தலைவர்    து.தலைவர்
அரியலூர்        அதிமுக    பாமக
கிருஷ்ணகிரி    தி.மு.க    தி.மு.க.
நாமக்கல்        அதிமுக    அதிமுக
பெரம்பலூர்    தி.மு.க    தி.மு.க.
தஞ்சாவூர்        தி.மு.க    தி.மு.க.
தி.மலை        தி.மு.க    தி.மு.க.
நாகை        தி.மு.க    தி.மு.க.
விருதுநகர்    அதிமுக    அதிமுக
திண்டுக்கல்    தி.மு.க    தி.மு.க.
திருச்சி        தி.மு.க    தி.மு.க.
கடலூர்        அதிமுக    தே.மு.தி.க.
மதுரை        தி.மு.க    தி.மு.க.
கரூர்        அதிமுக    அதிமுக
திருப்பூர்        அதிமுக    அதிமுக
புதுக்கோட்டை    அதிமுக    காங்கிரஸ்
கன்னியாகுமரி    அதிமுக    பா.ஜ.க.
தர்மபுரி        அதிமுக    பா.ம.க.
சேலம்        பா.ம.க    அதிமுக
ஈரோடு        அதிமுக    பா.ம.க.
நீலகிரி        தி.மு.க    தி.மு.க.
திருவாரூர்    தி.மு.க    தி.மு.க.
தேனி        அதிமுக    பா.ஜ.க.
தூத்துக்குடி    அதிமுக    அதிமுக
ராமநாதபுரம்    தி.மு.க    காங்கிரஸ்
சிவகங்கை    தேர்தல் நிறுத்தி வைப்பு
திருவள்ளூர்    தி.மு.க    தி.மு.க.
கோவை        அதிமுக    அதிமுக


Tags : elections ,clash ,election scandal ,places , Rural local elections, abuse, indirect elections
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...