×

என்பிஆர் ஒரு மாறுவேடமிட்ட என்ஆர்சி பிளவுபடுத்தும் குடியுரிமை சட்டம்: காங். செயற்குழுவில் சோனியா தாக்கு

புதுடெல்லி: ‘‘குடியுரிமை திருத்தம் பாரபட்சமான, பிளவுபடுத்தும் சட்டமாகும். அதன் மோசமான நோக்கம் மக்களை மத அடிப்படையில் பிரிப்பதாகும்.  தேசிய மக்கள்தொகை பதிவு (என்பிஆர்) என்பது மாறுவேடமிட்ட தேசிய குடிமக்கள் பதிவேடாகும் (என்ஆர்சி),’’ என காங்கிரஸ் செயற்குழுவில்  சோனியா காந்தி பேசினார். காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரம் கொண்ட செயற்குழு கூட்டம், கட்சியின் இடைக்கால  தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம்,  ஆனந்த் சர்மா, ஏ.கே.அந்தோணி, கே.சி.வேணுகோபால் மற்றும் பிரியங்கா காந்தி, ஜோதிராதித்யா சிந்தியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நாடு எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார, அரசியல் சவால்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து  மாணவர்கள் போராட்டம், பொருளாதார மந்தநிலை, தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு (என்பிஆர்) குறித்து  ஆலோசிக்கப்பட்டது. மேலும், குடியுரிமை சட்டத்திற்கு எதிரான மாணவர்கள் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு தருவதென முடிவு செய்யப்பட்டது.  கூட்டத்தை சோனியா காந்தி தொடங்கி வைத்து பேசியதாவது:குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதால் ஏற்படும் கடுமையான தீங்கை  ஆயிரக்கணக்கான இளைஞர்களும், பெண்களும், குறிப்பாக மாணவர்களும் உணர்ந்துள்ளனர். அந்த சட்டத்தை எதிர்த்து கடும் குளிரிலும், போலீசாரின்  கொடூரங்களை தாண்டியும் துணிச்சலுடன் வீதிகளில் போராடுகின்றனர்.

மாணவர்கள் போராட்டத்தின் தீவிரம் அதிகரித்து வந்தாலும், அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ள தயாராக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.  இதனால், உள்துறை அமைச்சரும், சில சமயம் பிரதமரும் கூட ஆத்திரத்தை கொட்டும் வகையில் பேசுகின்றனர். சில மாநிலங்களின் நிலைமை  ஆபத்தாக உள்ளது. குறிப்பாக, டெல்லி, உத்தரப் பிரதேசம் போன்றவை போலீஸ் மாநிலங்களாக மாறி வருகின்றன. தேசிய மக்கள்தொகை பதிவு  (என்பிஆர்) எந்த ஆபத்தும் இல்லாத ஓர் பதிவு என காங்கிரஸ் தலைவர்கள் யாரும் எந்த மாயையிலும் இருந்து விட வேண்டாம். அதன் வடிவம்,  உள்ளடக்கம் இரண்டிலும், என்பிஆர் என்பது ஓர் மாறுவேடமிட்ட என்ஆர்சி என்பதை மறந்து விடாதீர்கள்.
 
காஷ்மீரில் மக்களுக்கு அவர்களின் அடிப்படை உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுவது வேதனையும், கவலையும் தருகிறது. பாஜ அரசினால் காஷ்மீரின்  பொருளாதாரமும் மோசமடைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் நடத்தும்  போராட்டத்திற்கு காங்கிரஸ் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராகுல் மிஸ்சிங்
நேற்றைய கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. காங்கிரஸ் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்த பிறகு, இடைக்கால தலைவர்  சோனியா தலைமையில் நடந்த முதல் செயற்குழு கூட்டத்திலும் ராகுல் பங்கேற்கவில்லை. தற்போது, காங். செயற்குழு உறுப்பினர் பொறுப்பை தவிர  வேறெந்த பதவியையும் ராகுல் வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : NPR ,NRC ,Sonia ,Executive Committee ,Sonia Attack , NPR, NRC, Citizenship Act, Congress Working Group, Sonia
× RELATED இந்தியாவின் ஜனநாயகத்தின்...