×

அனுமதியின்றி செயல்படும் குடிநீர் நிறுவனங்களை மூட வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அனுமதியின்றி செயல்படும் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட பொதுப்பணிதுறைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில்  எத்தனை ஆலைகள் உள்ளன, அதில் எத்தனை அனுமதி பெற்றுள்ளன என்ற விவரங்களுடன் நேரில் ஆஜராக பொதுப்பணித்துறை பொறியாளருக்கு  உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை  புழலைச் சேர்ந்த சிவமுத்து என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், நிலத்தடி நீரை பாதுகாக்க, கடந்த  1987ம் ஆண்டு தமிழக அரசு சட்டம் இயற்றியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்காக இயற்றப்பட்ட இந்த சட்டத்தின்படி, நிலத்தடி  நீரை எடுக்க சென்னையில், சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்திடமும், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம்  மாவட்டங்களுக்கு, மாவட்ட ஆட்சியர்களிடமும் அனுமதி பெறவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை தடுக்க  தமிழக அரசு பல உத்தரவுகள் பிறப்பித்தும், அனுமதியின்றி குடிநீர் உற்பத்தி ஆலைகள்  இயங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில், 150 ஆலைகள் இயங்குவதாகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் 200 இடங்களிலும், காஞ்சிபுரத்தில் 80 இடங்களிலும்,  சட்டவிரோதமாக  நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாகவும் மனுவில் புகார் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார்  அடங்கிய அமர்வு, சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைவதை தடுக்கும் வகையில், அனுமதியின்றி  செயல்படும் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட வேண்டும் என பொதுப்பணித்துறை, சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழகம் முழுவதும் எத்தனை குடிநீர் உற்பத்தி  ஆலைகள் செயல்படுகின்றன, எத்தனை ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களுடன் பிப்ரவரி 6ம் தேதி நேரில்  ஆஜராகும்படி, பொதுப்பணி துறையின் நிலம் மற்றும் நிலத்தடி நீர்வள புள்ளிவிவர மைய  தலைமைப் பொறியாளர் பிரபாகரனுக்கு உத்தரவிட்டுள்ளனர்.  இந்த நீதிமன்ற உத்தரவின்படி, மூடப்படும் ஆலைகள், உரிய அனுமதி பெறும் வரை மீண்டும் செயல்பட அனுமதிக்க கூடாது என உத்தரவிட்ட  நீதிபதிகள், அதிகாரிகளிடம் அனுமதி பெற்றாலும் நீதிமன்ற அனுமதியில்லாமல் ஆலைகளை மீண்டும் இயக்க அனுமதிக்க கூடாது என அறிவுறுத்தி,  விசாரணையை பிப்ரவரி 6ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : High Court ,drinking water companies , Drinking Water Companies, Government of Tamil Nadu, High Court
× RELATED ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர்...