×

முலானி, தாரே அரை சதம் விளாசல்; மும்பை 6 விக்கெட்டுக்கு 284 ரன் குவிப்பு: பந்துவீச்சில் அஷ்வின், சாய் கிஷோர் அசத்தல்

சென்னை: தமிழக அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் பி பிரிவு லீக் ஆட்டத்தில், மும்பை அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 284 ரன் குவித்துள்ளது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற மும்பை அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. ஜெய் பிஸ்டா, பூபென் லால்வானி இருவரும் இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 13 ஓவரில் 50 ரன் சேர்த்தது. பிஸ்டா 41 ரன் (48 பந்து, 8 பவுண்டரி) விளாசி சாய் கிஷோர் பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.

நிதானமாக விளையாடிய லால்வானி 21 ரன் எடுத்து (84 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) சாய் கிஷோர் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார். அடுத்து வந்த சித்தேஷ் லாட் டக் அவுட்டாகி வெளியேற, , ஹர்திக் தமோர் 21 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் இந்திரஜித் வசம் பிடிபட்டார். அதிரடியாக விளையாடிய சர்பராஸ் கான் 36 ரன் எடுத்து (39 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) பெவிலியன் திரும்பினார். மும்பை அணி 48.2 ஓவரில் 129 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், ஷாம்ஸ் முலானி - கேப்டன் ஆதித்யா தாரே ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் அரை சதம் விளாசி அசத்தினர்.

சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முலானி 87 ரன் (158 பந்து, 14 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அஷ்வின் சுழலில் அபராஜித் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முலானி - தாரே ஜோடி 6வது விக்கெட்டுக்கு 155 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. முதல் நாள் ஆட்ட முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 284 ரன் குவித்துள்ளது (89.4 ஓவர்). தாரே 69 ரன்னுடன் களத்தில் உள்ளார். தமிழக பந்துவீச்சில் சாய் கிஷோர், அஷ்வின் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Tags : Sai Kishore ,Mulani ,Ashwin ,Mumbai Indians , Mulani, Dare, half a century, Vasal
× RELATED சட்டக் கல்வியை 5 ஆண்டுகளில் இருந்து 3...