×

இந்தியை திணிக்கவும் கூடாது, எதிர்க்கவும் கூடாது: ஜனநாயக நாட்டில் போராட்டங்கள் இயல்பானது...துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு

திருச்சி: இந்தியை திணிக்கவும் கூடாது, எதிர்க்கவும் கூடாது. ஜனநாயக நாட்டில் போராட்டங்கள் இயல்பானது என்று திருச்சி தேசிய கல்லுாரி நூற்றாண்டு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார். திருச்சி தேசியக் கல்லூரி நூற்றாண்டு துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவில் நூற்றாண்டு சிறப்பு தபால் உறையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டு, நூற்றாண்டு நினைவு  கல்வெட்டை திறந்து வைத்தார். பல்கலைக்கழக அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இளங்கலை உடற்கல்வி சரவணன், முதுகலை வணிகவியல் வேதவியாசன், முதுகலை வணிகவியல் நிதி  மேலாண்மை முரளிதரன், முதுநிலை தமிழ் மாணவி செந்தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு சான்றிதழ்கள் வழங்கி துணை ஜனாதிபதி வெங்கையா
நாயுடு பேசியதாவது: நாட்டில் ஐஐடி, ஐஐஎம், ஐஐஎஸ்சி போன்ற உலக சிறப்பு மிக்க கல்வி நிறுவனங்கள் உள்ள போதிலும், டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக்கழகங்கள் 2020 தரவரிசையில் முதல் 500 பல்கலைக்கழகங்களில்  இந்திய நிறுவனங்கள் 56 மட்டுமே இடம் பெற்றுள்ளது. முதல் 300 இடங்களில் இந்திய பல்கலை ஒன்று கூட இல்லை.

அனைவருக்கும் தாய்மொழி தான் முக்கியம். தாய்மொழியில் படித்த நாட்டின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, நான் உள்ளிட்டோர் முக்கிய இடங்களில் உள்ளோம். தாய்மொழி கண் போன்றது.  பிறமொழி கண்ணாடி போன்றது. இந்தி மொழி படிப்பது நல்லது. அதனால் தான் இந்தியாவின் துணை ஜனாதிபதியாக உள்ளேன். இந்தியை திணிக்கவும் கூடாது. எதிர்க்கவும் கூடாது. நோ இம்போசிஷன் (திணிப்பது),  நோ அப்போசிஷன் (எதிர்ப்பது) கூடாது என்பதுதான் எனது நிலைப்பாடு. போராட்டம் என்பது ஜனநாயக நாட்டில் இயல்பான ஒன்று. போராட்டங்கள் வன்முறைக்கு வழிவகுக்கவோ, பொதுச்சொத்தை  சேதப்படுத்துவதாகவோ இருக்க கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் வெங்கையா நாயுடு, மாணவர்கள் இருக்கைக்கு நேரடியாக சென்று அவர்களை சந்தித்து சிறிது நேரம் கலந்துரையாடினார். முன்னதாக கல்லூரிக்கு வந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை கல்லூரி நிர்வாகக்குழு துணைத்தலைவர் ஜேகர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் ரகுநாதன், முதல்வர் சுந்தரராமன், கல்லூரி இயக்குனர்  அன்பரசு ஆகியோர் வரவேற்றனர். வேத பாடசாலையின் மாணவர்கள் பூர்ண கும்ப மரியாதை அளித்தனர்.

Tags : Venkaiah Naidu ,Protests ,country ,talks , Protests are normal in a democratic country ... Vice President Venkaiah Naidu talks
× RELATED வெங்கையாநாயுடு, மிதுன்...