×

திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத திருவிழா: 35 கிடாய்கள் வெட்டி கமகம விருந்து

திருமங்கலம்: திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற விநோத திருவிழா இன்று நடந்தது. 35 கிடாய்கள் வெட்டி உணவு சமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ளது அனுப்பப்பட்டி கிராமம். இங்கு கிராமத்தின் காவல்தெய்வமான கருப்பாறை முத்தையா கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் விநோத திருவிழா நடைபெறும். பிறந்த பெண் குழந்தைகள் முதல் வயதான மூதாட்டி வரை திருவிழா நடைபெறும் சமயத்தில் கோயில் பக்கம் செல்ல மாட்டார்கள். திருவிழாவின் போது பக்தர்கள் கருப்புநிற கிடாய்களை நேர்த்திக்கடனாக கோயிலில் விட்டு செல்வர். இந்த கிடாய்கள் அடுத்த திருவிழா வரை சுற்றுவட்டார கிராமங்களில் வயல்வெளிகளில் மேய்ச்சலுக்கு செல்லும். நேர்த்திக்கடன் கிடாய் என்பதால் யாரும் இதனை தொந்தரவு செய்யமாட்டார்கள். திருவிழாவின் முதல் நாள் அனைத்து கிடாய்களும் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு பலியிடப்படுவது வழக்கம். இந்தாண்டு இந்த திருவிழா நேற்று இரவு துவங்கி இன்று காலை வரை நடைபெற்றது.

நள்ளிரவு வெண் பொங்கல் சமைக்கப்பட்டு சாமிக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சக்திகிடாய் முதலில் வெட்டப்பட்டது. தொடர்ந்து கடந்தாண்டு நேர்த்திக்கடனாக கோயிலுக்கு விடப்பட்ட 35 கிடாய்கள் கோயிலில் வெட்டப்பட்டு நள்ளிரவு 1 மணி முதல் அசைவ உணவு தயாரிக்கப்பட்டது. முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே உணவு தயாரிப்பில் ஈடுபட்டனர். உப்பு, புளி, காரம் எதுவும் பார்க்காமல் அசைவ உணவு தயாரிக்கப்பட்டது. தயாரிக்கப்பட்ட சாதம் மலைபோல் கோயில் முன்பு குவித்து வைக்கப்பட்டது. காலை 7 மணி முதல் கரடிக்கல், சாத்தங்குடி, செக்கானுரணி, செட்டிகுளம், பெருமாள்பட்டி, கிண்ணிமங்கலம், விக்கிரமங்கலம், உரப்பனூர், திருமங்கலம், தேனி, கம்பம், மாவிலிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சோ்ந்த 10 ஆயிரம் பேர் திருவிழாவில் பங்கேற்றனர். காலை 9 மணிக்கு கரும்பாறை முத்தையாவிற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோயிலில் உள்ள வெட்டவெளி திடலில் வரிசையாக  பக்தர்கள் அமரவைக்கப்பட்டு இலை போட்டு அசைவ உணவு பரிமாறப்பட்டது.

அனைத்து பக்தர்களுக்கும் உணவு பரிமாறிய பின்பே பக்தர்கள் சாப்பிட துவங்கினர். உணவு அருந்திய பக்தர்கள் யாரும் இலையை எடுக்காமல் அதே இடத்தில் விட்டு சென்றனர். காலை 9 மணிக்கு துவங்கிய அன்னதானம் மதியம் 12 மணி வரை தொடர்ந்தது. சாதி, பேதமின்றி வந்திருந்த அனைவருக்கும் இந்த அசைவ உணவு வழங்கப்பட்டது. பக்தர்கள் சாப்பிட்ட இலை காற்றில் பறந்து சென்றபின்பு தான் இந்த கோயில் பக்கம் பெண்கள் வர துவங்குவர். அதுவரை வயல்வெளிக்கு செல்வதாக இருந்தாலும் கூட கோயில் பக்கம் வராமல் மாற்றுபாதையில் செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘கரும்பாறை முத்தையா சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராமங்களுக்கு காவல்தெய்வமாக திகழ்ந்து வருகிறார். விவசாயம் செழிக்கவும், மழை நன்குபொழியவும் ஆண் பக்தர்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவ அன்னதான திருவிழா கடந்த 170 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது’ என்றனர்.

Tags : men ,kiddos ,Thirumangalam ,Thirumangalam Men's Only Celebration Only ,kamagama festival , Thirumangalam, Men, Carnival, Feast
× RELATED ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 10 இளைஞர்கள் நாடு திரும்பினர்