புதுடெல்லி: வருகிற 26ம் தேதி குடியரசு தினத்திற்கு முன்னதாக நாட்டின் முக்கிய நகரங்களில் தீவிரவாத நாசவேலைகளைகளில் ஈடுபட 300 தீவிரவாதிகள் எல்லையில் ஊடுருவி பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல் வெளியாகி உள்ளது. அதனால், அனைத்து மாநில அரசுகளுக்கும் முன்னெச்சரிக்கை அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி உள்ளது. வருகிற 26ம் தேதி குடியரசு தினத்திற்கு முன்னதாக நாட்டின் முக்கிய நகரங்கள் முன்எச்சரிக்கையுடன் இருக்க, மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு உயர் மட்ட எச்சரிக்கை அறிக்கையை அனுப்பி உள்ளது.
அதில், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற ஆப்கானை சேர்ந்தவர் உட்பட 300 தீவிரவாதிகள் ஜம்மு - காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள நீலம், லீபா மற்றும் டங்தார் பள்ளத்தாக்குகளில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்திய ராணுவம் 6 முதல் 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் வீரர்களைக் கொன்ற மூன்று மாதங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவலை தொடர்ந்து, இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு இந்திய போர் விமானங்கள் காஷ்மீரின் சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் நடைமுறை எல்லையை கடந்து, பாகிஸ்தான் எல்லையில் பதுங்கியிருந்த தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசியதை தொடர்ந்து, பெரும்பாலான தீவிரவாத முகாம்கள் ஓட்டம் பிடித்துவிட்டன. ஆனால், தற்போது புதிய முகாம்களை அமைத்து வருவதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் சிறப்பு சேவைக் குழு கமாண்டோக்களின் சில சிறிய குழுக்கள் ஜம்மு-காஷ்மீரில் கெரான் மற்றும் பூஞ்ச் துறைகளுக்கு எதிரே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், இந்த குழுக்களின் எண்ணிக்கை தெளிவாக இல்லை என்று அவர்கள் கூறினர். ஜெயஷ் இ முகமது இயக்க தலைவர் மசூத் அசாரின் சகோதரர் முப்தி ரவூப் அஸ்கர் இந்தியாவில் தாக்குதல்களுக்குத் திட்டமிட்டு வருவதாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள், இந்திய நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக இந்திய புலனாய்வு அமைப்புகளால் தகவல் பகிரப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னால் இருப்பதாகக் கருதப்படும் அஸ்கர், கடந்த ஆண்டு ஆகஸ்டில் பஹவல்பூரில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஒரு கூட்டத்தை நடத்தியதாகவும், இந்தியாவுக்குள் அதிகளவு ஊடுருவல்களை அனுப்ப லாஞ்ச்பேட் தளபதிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2019ம் ஆண்டில் 157 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதன் பின்னணி, ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, பிரிவினைவாதிகள் கைது போன்றவற்றால் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத குழுக்கள், இந்தியா மீதான தாக்குதலை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. துணையோடு இந்த தீவிரவாதிகள் இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அவர்களுக்கு ஆப்கன் தாலிபன்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தீவிரவாதிகள் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த குறிவைத்திருப்பதாக தொலைபேசி உரையாடல்களை இடைமறித்து கேட்ட இந்திய ராணுவ உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர். பனிக்காலம் என்பதால் பதுங்கியுள்ள தீவிரவாதிகள் கோடையில் பனி உருகத் தொடங்கும் போது இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிக்கலாம் என ராணுவத்தினருக்கும், மாநில அரசாங்கத்திற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.