×

தஞ்சை மாநகராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணி துவக்கம்

தஞ்சை: தஞ்சை மாநகராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. தஞ்சை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட விதிகள் 2016ன்கீழ் 18 மற்றும் 19 வார்டுகள் குப்பை தொட்டி இல்லா நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் அன்றாடம் சேரும் குப்பைகளை தரம் பிரித்து சேகரித்து பரவலாக்கப்பட்ட கழிவு மேலாண்மை முறையில் ஜெபமாலைபுரம் உரக்கிடங்கு பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மறுசுழற்சி செய்யும் பொருட்டு நுண் உரமாக்கல் மையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மறுசுழற்சி செய்யப்பட கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் அதற்கான இயந்திரத்தில் அறைத்து தூளாக்கப்பட்டு பிளாஸ்டிக் சாலை அமைப்பதற்கான மூலப்பொருள் தயார் செய்யப்படுகிறது. அதேபோல் காய்கறி கழிவுகளில் இருந்து உரமாக தயார் செய்யப்படுகிறது.

பணியாளர்களால் சேகரிக்கப்படும் தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்ற இனங்கள் பழைய இரும்பு பொருள் கடைகளில் கொடுத்து அதன் மூலம் பெறப்படும் சிறு தொகை அந்தந்த பணியாளர்களுக்கு ஊக்கப்பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அபாயகரமான வீட்டு கழிவுகளில் ஒன்றான பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை எரியூட்டு இயந்திரம் வாயிலாக அன்றைய தினமே எரியூட்டப்படுகிறது. இந்த குப்பைகளி–்ல் இருந்து பிரிக்கப்படும் பிற தொழில்களுக்கான மூலப்பொருள்கள் மற்றும் உரம் ஆகியவற்றை தேவைப்பட்டால் மாநகராட்சியை அணுகி பெற்று கொள்ளலாம். இதை செயல்படுத்தும் வகையில் 18 மற்றும் 19வது வார்டுகளில் வாழும் 5 ஆயிரம் குடியிருப்புகளுக்கு அன்றாடம் சேகரிக்கும் குப்பைகளை தரம் பிரித்து மாநகராட்சி சுகாதார பிரிவு பணியாளர்களிடம் ஒப்படைப்பது குறித்து துண்டு பிரசுரம் தபால் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் மாநகராட்சி பகுதிகளில் 13 இடங்களில் இத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags : Tanjore Corporation, Garbage, Fertilizer
× RELATED தமிழகத்தில் 2 நாட்களுக்கு 5 டிகிரி...