விருதுநகர் அருகே நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் டி.எஸ்.பியை அரிவாளால் வெட்டிய இருவர் கைது

விருதுநகர்:  உள்ளாட்சி பதவிகளுக்கான மறைமுக தேர்தலின் போது பல இடங்களில் ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சிகளிடையே மோதல் வெடித்ததால் பரபரப்பு நிலவியது. விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றிய தலைவர் பதவியை பிடிப்பது தொடர்பாக அதிமுக-திமுக இடையே கடும் போட்டி நிலவியது. இரு கட்சிகளிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற போலீஸ் டி.எஸ்.பி வெங்கடேசனை ஆளும் கட்சியினர் அரிவாளால் வெட்டினர். மேலும் ஒன்றிய அலுவலகத்திற்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் கல்வீசியும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, டி.எஸ்.பியை அரிவாளால் வெட்டிய, கமுதியை சேர்ந்த பாலா, வீரசோழன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று சிவகங்கை மாவட்ட ஊராட்சியில் அதிமுக மற்றும் திமுகவிற்கு தலா 8 உறுப்பினர்கள் இருப்பதால் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலை தடுக்க ஆளும் கட்சி முயற்சித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து திமுகவினர் மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுவதை அதிமுகவினர் தடுக்க முயன்றதால் மோதல் ஏற்பட்டது. மேலும் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கான தேர்தலிலும் மோதல் வெடித்தது. அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆளும் கட்சியினர் நாற்காலிகளை வீசி எரிந்ததால் பரபரப்பு நிலவியது.  தருமபுரி, கடலூர் உட்பட பல மாவட்டங்களிலும், கடும் போட்டி நிலவிய ஒன்றியங்களில் திமுக உறுப்பினர்களை வாக்களிக்க விடாமல் அதிமுகவினர் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பல இடங்களில் வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்பட்டது.

Related Stories: