×

விவசாய நிலங்களுக்கு செல்லும் வழியை அடைத்து ரயில் பாலம்: தேனி அருகே விவசாயிகள் பாதிப்பு

தேனி: தேனி அருகே விவசாய நிலங்களுக்கு செல்லும் சாலையை மறித்து ரயில் தண்டவாளம் அமைத்ததால் விவசாய விளைபொருள்களை எடுத்து வர வழியில்லாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேனி அருகே குன்னூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தின் அருகே செங்குளம், கருங்குளம் என இரு கண்மாய்கள் உள்ளன. இவைகளுக்கு வைகை ஆற்றில் இருந்து பிரதான கால்வாய் மூலம் நீர்வரத்து உள்ளது. இக்கண்மாய்களின் மூலமாக சுமார் 800 ஏக்கர் நிலம் பாசனவசதி பெற்று வருகிறது. இப்பாசன நிலங்களில் கரும்பு, வாழை, எள், காய்கறி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. முப்போகம் விளையும் இந்த நிலத்தில் விளையும் விளைபொருள்களை எடுத்துக்கொண்டு வாகனங்களின் மூலம் குன்னூருக்கு விவசாயிகள் கொண்டு வருவது வழக்கம். ஆனால், தற்போது போடி - மதுரை அகலரயில்பாதை திட்டத்தில் இந்த விளை நிலங்களுக்கு குன்னூரில் இருந்து செல்லும் சாலையின் நடுவே ரயில் தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இச்சாலையின் மீது எந்த வாகனம் மூலமாகவும் விளைபொருள்களை எடுத்து வரமுடியாத நிலைக்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து இப்பகுதி சிறுவிவசாய சங்க தலைவர் விஜயகுமார் கூறியதாவது: குன்னூர் கிராமத்தில் இருந்து செங்குளம், கருங்குளம் பாசன நிலங்களில் விளையும் விளைபொருள்களை எடுத்து வர ஏற்கனவே சாலை வசதி இருந்தது. இதனை தற்போது ரயில்வே தண்டவாளம் அமைக்க தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் விளையும் விளைபொருள்களை எடுத்துக் கொண்டு வர மாற்றுப்பாதையில்லை. இதுகுறித்து பலமுறை கலெக்டரிடமும், ரயில்வே நிர்வாகத்திடமும் முறையிட்டும் பலனில்லாமல் உள்ளது. இப்பாசன நிலப்பகுதியில் விளையும் விளைபொருள்களை எடுத்து வர வசதியில்லாவிட்டால் விவசாயிகள் பெரும் சிரமம் அடைய நேரிடும் என்பதால் மாவட்ட நிர்வாகம் இப்பகுதி விவசாயிகளின் நலன்கருதி சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.

Tags : Railway bridge ,farmland ,Theni , In agricultural lands, railway bridge, Theni, farmers
× RELATED தேர்தல் விதிமீறல் குறித்து புகார் தெரிவிக்கலாம்