×

ஓமன் நாட்டின் சுல்தான் காபூஸ் மறைவு: இந்தியாவின் உண்மையான நண்பராக இருந்தார்...பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: ஓமன் நாட்டின் சுல்தானாக 49 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த காபூஸ் பின் சையத் அல் சையத் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஓமன் நாட்டின் சுல்தானாக தமது  தந்தைக்கு பின்பு 1970-ம் ஆண்டு காபூஸ் பின் சையத் பொறுப்பெற்றார். பல ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காபூஸ் தனது 79 வயதில் உயிரிழந்துள்ளார்.

தமது பதவிக்காலத்தில் எண்ணெய் வளமிக்க ஓமன் நாட்டை வளர்ச்சி பாதையில் எடுத்து சென்றவர் காபூஸ். அல் சையத் குடும்பத்தின் 8வது ஆட்சியளரான காபூஸ், அமெரிக்கா-ஈரான் இடையே அணு ஆயுத  உற்பத்தி நிறுத்தம் தொடர்பான ஓப்பந்தம் கையெழுத்தானதில் முக்கிய பங்கு வகித்தவர். அவருக்கு திருமணம் ஆகவில்லை என்பதால், அடுத்த சுல்தான் யார் என்பதை அந்நாட்டு வழக்கப்படி மன்னர் குடும்பத்தை  சேர்ந்தவர்கள் தேர்வு செய்ய உள்ளனர்.

இதற்கிடையே, கபூஸின் மறைவிற்கு பல்வேறு உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஓமன் சுல்தான் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சுல்தான்  கபூஸ் பின் சையத் அல் சையத் காலமானதைப் பற்றி அறிந்ததும் நான் மிகவும் வேதனை அடைகிறேன். அவர் ஒரு தொலைநோக்குப்பார்வை கொண்ட தலைவராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். அவர்  ஓமனை நவீனமான மற்றும் வளமான தேசமாக மாற்றினார்.

இந்தியாவுக்கும் ஓமனுக்கும் இடையிலான நட்புணர்வை வளர்ப்பதற்கு வலுவான தலைமைத்துவத்தை வழங்கினார். சுல்தான் காபூஸ் இந்தியாவின் உண்மையான நண்பராகவும் இருந்தார். அவரது ஆன்மா சாந்தி  அடையட்டும்’, என பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags : India ,Death of Sultan Kaboos of Oman , Death of Sultan Kaboos of Oman: India's true friend ... PM Modi condolences
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!