×

கொடைக்கானலில் கொட்டுது உறைபனி: 5 டிகிரி வரை சென்றதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் உறைபனி சீசன் துவங்கியதையடுத்து, பொதுமக்கள், வியாபாரிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை கடுங்குளிர் காலமான உறைபனி சீசன் நிலவும். வழக்கத்தை விட இந்த ஆண்டு பருவமழை அதிகளவு பெய்ததால், இந்த ஆண்டு உறைபனி கால தாமதமாகத்தான் துவங்கியுள்ளது. தற்போது கொடைக்கானலில் உறைபனி தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி அதிகமாக காணப்படுகிறது. இதனால் ஏரி மற்றும் ஜிம்கானா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெண்ணிற கம்பளம் விரித்ததை போல் உறைபனி காட்சியளிக்கிறது. உறைபனி தாக்கத்தால் ஏரியில் நடைபயிற்சி செல்பவர்கள் வெயில் வந்த பிறகே நடைபயிற்சி செல்கின்றனர். சிறு வியாபாரிகள் கடைகளை தாமதமாகவே திறந்து வருகின்றனர். கொடைக்கானல் வாழ் மக்கள் காலையில் பணிகளை தாமதமாக துவக்கி மாலையில் விரைவாக முடித்து வருகின்றனர்.

இரவு நேரங்களில் கூடுதலாக கம்பளிகள், கையுறைகள், கோல்ட் க்ரீம், ஹீட்டர் பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். மேலும் கடுமையான குளிரால் கொடைக்கானல் மேல்மலை, கீழ்மலை பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பட்டாணி, பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்படும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். இதனால் அனைவரது இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கொடைக்கானல் வரும் சுற்றுலாப்பயணிகள் இந்த உறைபனி சீசனை ரசித்து வருகின்றனர். கொடைக்கானல் வானியல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி குமரவேல் கூறுகையில், ‘‘கொடைக்கானலில் இந்த ஆண்டு உறைபனி சீசன் 10 முதல் 15 நாட்கள் வரை தாமதமாக துவங்கியுள்ளது. இந்த உறைபனி இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் தொடரும். கடந்த ஆண்டு 6 டிகிரி செல்சியஸ் அளவிற்கு கீழாக சீதோஷ்ணம் செல்லவில்லை. ஆனால் நேற்று 5 டிகிரி வரை குளிரின் தாக்கம் இருந்தது. இந்த கடுங்குளிர் இன்னும் ஓரிரு தினங்களில் 4 டிகிரி வரை செல்லக்கூடும். 4 ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானலில் ஜீரோ டிகிரி செல்சியஸ் பதிவானது. இந்த ஆண்டு அதற்கு வாய்ப்புகள் குறைவு. கொடைக்கானல் மலைப்பகுதியில் குளிரின் தாக்கம் பற்றி தீவிரமாக கண்காணித்து வருகிறோம்’’ என்றார்.

Tags : Kodaikanal , Kodaikanal, freezing, normal life, impact
× RELATED இ-பாஸ் நடைமுறையால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்: வணிகர்கள்!